Skip to main content

"நாங்க ரெண்டு பேரும் சும்மாதான்... மெயின் பார்ட்டே இவுங்கதான்"  - ஜாலி மூடில் சீமான்   

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பின்னர் 'தாரை தப்பட்டை', 'பில்லா பாண்டி' படங்களின் மூலம் நடிகர் என தமிழ் திரையுலகில் வளம் வருபவர் ஆர்.கே.சுரேஷ். ஆர்.கே.சுரேஷுடன் இணைந்து 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிக்கவிருக்கும் 'அமீரா' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் ஜாலியாகப் பேசி மகிழ்ந்தார் சீமான்.

 

seeman r.k.suresh



"இந்தப் படத்துக்கு ஏன் தமிழ் பெயர் வைக்கல?" என்று ஒருவர் கேட்க, சிரித்துக்கொண்டே "இந்தப் படத்தில் ஒரு இஸ்லாமிய பெண் கதாபாத்திரம்தான் முக்கிய பாத்திரம். இஸ்லாமிய பெண் எனும்போதே அந்தப் பாத்திரத்தின் பெயரில் உருது, அரபி இருக்கலாம். அதனாலேயே அது வேற்று மொழி பெயர் என்றாகிவிடாது. எப்படி நமது தமிழ் இஸ்லாமியர்கள் இஸ்மாயில், இக்பால் என்றெல்லாம் பெயர்களைத் தாங்கி நிற்கிறார்களோ அப்படித்தான் இதுவும். இந்தப் படத்துக்கு 'தமிழரசி' என்று பெயர் வைத்தால் அது பொருத்தமாக இருக்காது. இந்தப் படத்தின் கதையைத் தாங்கி நிற்பதே அந்தப் பாத்திரம்தான். நான், ஆர்.கே.சுரேஷ் ரெண்டு பேரும் சும்மாதான். மெயின் பார்ட் இவுங்கதான்" என்று 'அமீரா' படத்தின் நாயகியாக நடிக்கும் மலையாள நடிகை அனு சித்தாராவைக் குறிப்பிட்டார்.

'தேர்தல் வருகிறது, திரைப்படம் நடிக்க எப்படி நேரம் கிடைக்கிறது?' என்று ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மற்றவர்கள் எல்லோரும் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு இப்பொழுதிருந்தே வேலை இருப்பதாகவும் தாங்கள் தனித்து நிற்பதால் அந்த வேலைக்கு செலவாகும் இருபது நாட்களை இடையிடையே திரைப்படம் நடிக்க செலவிடுவதாகத் தெரிவித்தார். மேலும் திரையில் தொடர்ந்து தோன்றுவதன் அவசியத்தை தனது அப்பாவாக மதித்த  நடிகர் மணிவண்ணன் பலமுறை கூறியிருப்பதாகவும் தற்போது தனது அப்பாவாக மதிக்கும் இயக்குனர் பாரதிராஜாவும் அதை மீண்டும் மீண்டும் கூறி வருவதால் அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து தான் அவ்வப்போது படங்களில் நடிப்பதாகத் தெரிவித்தார்.

"ஒரு மேடையில ஒரு மணி நேரத்துக்கு மேல வேர்க்க விறுவிறுக்க பல விஷயங்களை பேசி முடிச்சு கீழ இறங்கி வர்றேன். கூட்டத்துல இருந்து ஒருத்தரு கைய குடுத்து 'மாயாண்டி குடும்பத்தார் படத்துல நல்லா நடிச்சிருந்தீங்க'னு சொல்றாரு. 'அடப்பாவிகளா, அப்ப இவ்வளவு நேரம் பேசுனதெல்லாம் உங்க மனசுல நிக்கலையா'னு நினைச்சேன். ஆனா, அதுதான் உண்மை. திரைப்படத்தின் தாக்கம் பெரிது. அதுனால அதை பயன்படுத்திக்குறேன். எல்லா பாத்திரத்திலும் நான் நடிக்க முடியாது. நான் நடிக்கக்கூடிய பாத்திரங்களில் மட்டும் நடிக்கிறேன்" என்று கூறிய சீமான், தொடர்ந்து தான் சிம்புவை வைத்து இயக்கப்போகும் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்றார்.                                      

 

 

சார்ந்த செய்திகள்