தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் சர்ச்சையாகி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது, “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் பிரபலங்கள் தாண்டி, திரைப் பிரபலங்களாகிய பா. ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்டோர் உதயநிதிக்கு ஆதரவளித்திருந்தனர். அந்த வகையில் சத்யராஜ் அவரைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமைச்சர் உதயநிதி ரொம்ப தெளிவா பேசியிருக்கிறார். அவருடைய சிந்தனை தெளிவுக்கும் அவருடைய கருத்தியல் தெளிவுக்கும், அவருடைய துணிச்சலுக்கும் மேலும் அவர் ஒவ்வொரு விஷயத்தையும் கையாள்கிற விதத்தை பார்க்கும் பொழுதும் எனக்கு பெருமையாக உள்ளது. அவருக்கு எனது பாராட்டுக்கள்" என்றார்.