கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் ஊரடங்கு, சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். கரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பொதுமக்களும் பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுகுறித்து நடிகர் சரத்குமார் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... "பொருளாதார பின்னடைவை சீர்செய்யவும், அரசுக்கு வருவாய் அவசியம் என்ற அடிப்படையிலும் ஊரடங்கில் தமிழக அரசு பல தளர்வுகள் அறிவித்தாலும், மதுக் கடைகள் திறக்க அனுமதித்திருப்பது ஏற்புடையதல்ல. தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறதே தவிர, கரோனா முற்றிலும் நீங்கவில்லை. ஊரடங்கு தளர்வினால் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதினால் கரோனா தொற்று பரவும் அபாயமும் அதிகம். எனவே, தமிழக அரசு மதுக்கடை திறக்க வெளியிட்ட அறிவிப்பை திரும்பப்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.