
மௌனகுரு, மகாமுனி படங்களைத் தொடர்ந்து சாந்தகுமார் இயக்கியுள்ள அடுத்த படம் ரசவாதி. இப்படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடிக்க ஹீரோயினாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், சுஜித் சங்கர், ஜி.எம்.சுந்தர், சுஜாதா, ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் சாந்தகுமார் இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரியில் வெளியானது. இதையடுத்து சமீபத்தில் ட்ரைலர் வெளியானது. மே 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் சாந்தகுமார் பேசுகையில், “முதல் இரண்டு படத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்ற இருந்ததால் அதற்கான நேரம் தேவைப்பட்டது. இந்தக் கதைக்கு என்ன தேவையோ அதைப் பண்ணியிருக்கோம். கதாபாத்திரங்களை எழுதியப்பிறகே அதற்கான நடிகரை தேடுகிறேன். அர்ஜுன் தாஸ் ஒரு மருத்துவராக நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்தைச் சுற்றி தான் கதை இருக்கும்” என்றார்.