பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராதே'. இது 'வெடரன்' என்ற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். கடந்த ஆண்டே வெளியாகவிருந்த இப்படம், கரோனா பரவல் காரணமாகத் தள்ளிப்போனது.
இந்த நிலையில், ராதே திரைப்படம் இன்று 'ஜீ ப்ளெக்ஸ்' ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டது குறித்து நடிகர் சல்மான் கான் கூறுகையில், "இந்த ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு, திரையரங்குகள் திறந்த பின் ராதே திரைப்படம் நிச்சயமாகத் திரையரங்கில் திரையிடப்படும். ஏனென்றால் திரையரங்கில் மட்டுமே படத்தைப் பார்க்க விரும்பும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தற்போது வெளிநாட்டில் படம் வெளியாகியுள்ளது. வழக்கமாக நாங்கள் வெளியிடும் எண்ணிக்கையில் அல்ல; ஆனால் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டிற்கு திரையரங்க உரிமையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இந்த சூழலில் இதைச் செய்வதுதான் சரி. தொற்று காலம் முடிந்ததும் படத்தை வெளியிடலாம் என நினைத்தோம். ஆனால் அது முடிவதுபோல தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட ராதே திரைப்படத்தைத் திரையரங்கில் வெளியிட கோரிக்கை எழுந்து, நாங்கள் ஏற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏனென்றால் ராதே வந்தால் மீண்டும் திரையரங்குக்குக் கூட்டம் வரும் என்று நினைத்தார்கள். ஆனால் அதுவும் தற்போது நடக்கவில்லை" எனக் கூறினார்.
மேலும், ஈகைத் திருநாளுக்கு படம் வெளியாகும் என்று தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றியதுபோல ரசிகர்களும் படத்தைத் திருட்டுத்தனமாகப் பார்க்கமாட்டோம் என்ற வாக்கைத் தர வேண்டும் என வேண்டுகோளும் வைத்துள்ளார்.