தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் சாய் பல்லவி, அவ்வபோது சமூக சார்ந்த பிரச்சனைகள் குறித்து பொதுவெளியில் பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று சென்னை எழும்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஆலோசனை மையம் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய சாய் பல்லவி, “இந்த மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மையத்தை தொடர்பு கொண்ட உடனே, அவர்களின் பிரச்சனைகளை அறிந்து, அதை தீர்த்து வைக்கப்படுவது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. சிறுவயதில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இன்னொருவரிடம் கூறலாம் என்பதே மிக பெரிய வரமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை நடந்தால், அதை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் மன வேதனைக்கு உள்ளான பிள்ளைகளே அதிகமாக இருந்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை ஒரு எண்ணை தட்டினால் போதும், நம்முடைய மன வேதனையை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். இது அவ்வளவு ஈஸி இல்லை. மன்னிச்சிடுங்க.. இந்த திட்டம் பற்றி ஒரு மாதத்திற்கு முன்புதான் தெரியவந்தது. இது குறித்து நிறைய பேருக்கு தெரியப்படுத்த வேண்டும். இத்திட்டத்தின் மூலம் நிறைய குழந்தைகள் மற்றும் பெண்கள் பயன்பெறுவார்கள். இதனை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது முதன்மையான வேண்டுகோள்” எனத் தெரிவித்துள்ளார்.