சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து, செல்வராகவன் இயக்கியுள்ள என்.ஜி.கே படம் வரும் மே 31ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்து சாய் பல்லவி பேசும்போது...
"முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய வசனங்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் நின்று கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று அங்குதான் கற்றுக் கொண்டேன். மேலும், படப்பிடிப்பு நடப்பதற்கு முதல் நாளே அந்த காட்சிக்கு தேவையான வசங்களை முன்பே வாங்கி வீட்டில் பயிற்சி எடுத்து கொண்டு வருவோம். ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும். ஹாம் வொர்க் தேவையில்லை. ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார். அதுமட்டுமில்லாமல் கோபப்பட்டு நடிக்கும் காட்சிகளில் கூட மூச்சுவிடுவது வெளியே தெரியக்கூடாது என்று கூறுவார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம் வரும்வரை விடமாட்டார்" என்றார்.