‘ப்ரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. நேரடி மலையாளப் படமாக உருவான இப்படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, சாய் பல்லவிக்கு தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்தன.
தமிழில் சாய் பல்லவி நடித்த படங்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத நிலையில், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாக சைதன்யாவின் ‘லவ் ஸ்டோரி’, நடிகர் ராணாவின் ‘விராட பருவம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி தெலுங்கில் முன்னணி நடிகை அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி இந்தியில் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘சத்ரபதி’ படத்தை தற்போது இந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளனர். வி.வி. விநாயக் இயக்கவுள்ள இப்படத்தில் சாய் பல்லவியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்க சாய் பல்லவி சம்மதம் தெரிவிக்கும்பட்சத்தில், சாய் பல்லவியின் பாலிவுட் எண்ட்ரியாக இப்படம் அமையும்.