Skip to main content

ருத்ரதாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

Rudra Thandavam

 

ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான 'திரௌபதி' திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. ஒருதரப்பினர் மத்தியில் இப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவிய போதிலும், வணிகரீதியாக இப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, 'திரௌபதி' கூட்டணி ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் ரிஷி ரிச்சர்டு நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சின்னத்திரை புகழ் தர்ஷா குப்தா நடித்துள்ளார். ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீபின் இசையமைத்துள்ளார். யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் தமிழக உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். மொத்த வெளிநாட்டு ரிலீஸ் மற்றும் ஆடியோ ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

 

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் திரைப்படம் வெளியாகவுள்ளது. கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்ட ட்ரைலரில் பல சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்ற போதிலும், தற்போதுவரை ருத்ரதாண்டவம் படத்தின் ட்ரைலர் யூடியூப் தளத்தில் 5.4 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அவருக்கு கல்யாணமான்னு எனக்கு போன் பண்ணி கேட்டாங்க” - மோகன்.ஜி கலகலப்பு

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

mohan g speech in sila Nodigalil Pre Release Event

 

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சில நொடிகளில்’. மிஸ்ட்ரி மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு இயக்குநர் மோகன்.ஜி கலந்து கொண்டு பேசினார்.  

 

மோகன்.ஜி  பேசியதாவது, "என்னுடைய ஹீரோ ரிச்சர்ட் சாருடைய படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இதுபோன்ற விழா அவருக்கு நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என நான் நீண்ட நாள் காத்திருந்தேன். கடினமான ஒரு சமயத்தில் நான் போய் அவரிடம் நின்றபோது எனக்கு உதவுவதற்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படம் ரிலீஸின் போதும் எதிர்பாராத சில பிரச்சினைகள் வந்தது. அப்போதும் நான் அவரிடம்தான் போனேன். எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக நின்றார். அப்படி உருவானதுதான் 'திரெளபதி'. அவர் இல்லை என்றால் 'திரெளபதி' இல்லை. இந்தப் படம் 18 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. அதேபோல, அடுத்த படமான 'ருத்ரதாண்டவ'மும் 13 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. 

 

மூன்றாவது படம் ஒரு கேப் விட்டு பண்ணலாம் என்றார். அதனால்தான் செல்வா சாருடன் 'பகாசூரன்' செய்தேன். நானும் ரிச்சர்ட் சாரும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறோம். அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும். சினிமாவில் நான் ஐந்து வருடம் பயணித்தது அவரால்தான். திடீரென இவர் யாஷிகாவுடன் ஃபோட்டோ போட்டதும், 'என்ன சாருக்கு கல்யாணமா?' என நிறைய பேர் என்னிடமும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவரிடம் நான் கேட்டபோது, சிரித்தார். பின்புதான் படத்திற்கான புரோமோஷன் எனப் புரிந்தது. ரிச்சர்ட் சாரை இது போல திரையில்  ஸ்டைலிஷாகப் பார்ப்பது மகிழ்ச்சி" என்றார். 

 

 

Next Story

திரெளபதி படத்தில் நடிக்காததற்கு இதுதான் காரணம் - ப்ரஜின் ஓபன் டாக்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

Actor Prajiinn Interview

 

சின்னதிரையில் தொகுப்பாளராக ஆரம்பித்து பெரிய திரையில் நடிகராக வலம் வருகிற, சமீபத்தில் டி3 படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ப்ரஜினுடன் ஒரு ஜாலியான பேட்டி...

 

கடந்த 20 வருடங்களாக என்னுடைய உழைப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடித்துள்ள தமிழ் படம் டி3. அதற்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு எந்த சினிமா பின்புலமும் கிடையாது. ஒரு டிவி ஆங்கராக என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி அதன் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நானே என்னைச் செதுக்கினேன். 

 

இயக்குநர் மோகன்.ஜியும் நானும் நீண்ட கால நண்பர்கள். அவருடைய பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் நான் நடித்தேன். அந்தப் படம் இப்போது வெளிவந்திருந்தால் பெரிதாக பேசப்பட்டிருக்கும். திரௌபதி படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் அவர் என்னைத்தான் அணுகினார். அந்தக் கதையில் எனக்கு சில கேள்விகள் இருந்தது. அப்போது என்னால் அதில் நடிக்க முடியவில்லை. ஆனால், அவர் வெற்றிபெற்றுக் காட்டினார். படத்துக்கு பப்ளிசிட்டி செய்வது குறித்து மோகன் அதிகம் சிந்திப்பார்.

 

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று அனைவருக்கும் அனைத்து தகவல்களும் இன்டர்நெட் மூலம் கிடைக்கின்றன. எனவே சினிமா மூலம் தான் போதை குறித்து இளைஞர்களுக்கு அதிகம் தெரிகிறது என்பதில் உண்மையில்லை. திரைப்படங்கள் மூலம் முடிந்த வரை போதைக்கு எதிரான விழிப்புணர்வைத் தான் நாங்கள் ஏற்படுத்துகிறோம். நல்லவர்கள் நிச்சயம் சினிமா காட்சிகள் மூலம் கெட்டுப்போக மாட்டார்கள். சினிமாவில் என்னுடைய உழைப்பு சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் வெற்றி தாமதமாகிறது. 

 

நான் எப்போதுமே பாசிட்டிவான சிந்தனை கொண்டவன். விஜய் சேதுபதி இன்று இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து விடாமுயற்சியோடு சினிமா உலகில் அவர் நின்றது தான். மற்றவர்கள் வெற்றி பெறுவது குறித்து எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தான். சில நல்ல படங்களை ஆரம்பக்காலத்தில் நான் மிஸ் செய்திருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது என் மனைவியுடைய முழு ஒத்துழைப்பு எனக்கு இருந்தது.

 

நான் சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தபோது குடும்பத்தை நிர்வகித்தது என்னுடைய மனைவிதான். சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். மகிழ்ச்சியான குடும்பம். என்னைப் பொறுத்தவரை சினிமா, சின்னதிரை என்று அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறேன். பிரச்சனைகளைக் கண்டு துவளாமல் போராடிக்கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் என்பது என் நம்பிக்கை.