சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். இவர் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தங்கமகன், வெள்ளைக்காரத்துரை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், சினிமா தயாரிப்பாளர்களுக்கு பணத்தை வழங்கி ஃபைனான்சியர் தொழிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் அ.தி.மு.க. முக்கிய பொறுப்பில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தினர்.
அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் சுமார் 30 இடங்களிலும் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று நிறைவடைந்தது.
இந்நிலையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் வராத ரூ.26 கோடி ருபாய் ரொக்கம் மற்றும் ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும் சில தயாரிப்பாளர்களின் இல்லத்திலும் சோதனை நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.