![rajinikanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/iKNN3MZYfG9IU-aQv1fC4l99KDePpd-xUPUUzQwC7tY/1626170463/sites/default/files/inline-images/17_32.jpg)
இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. பின்னர் சென்னை திரும்பிய படக்குழு, நீண்ட ஓய்வுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கியது.
சென்னை படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அண்ணாத்த’ படக்குழு, மீண்டும் ஹைதராபாத் விரைந்தது. ஹைதராபாத் படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்படப்பிடிப்பை நிறைவுசெய்த ரஜினிகாந்த், தன்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா விரைந்தார். அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அங்கேயே தங்கி ஓய்வெடுத்துவந்த ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் நாளை (14.07.2021) மேற்கு வங்கம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் நான்கு நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் விடுபட்ட காட்சிகளைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.