Skip to main content

3 கோடி நிதியுதவி...! ராகவா லாரன்ஸ் அதிரடி!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவே முடங்கியுள்ள நிலையில், தினக்கூலி பணியாளர்கள் வருமானமின்றி, அத்தியாவசியப் பொருட்களுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன. இதையடுத்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் ஆகியோர் கஷ்டப்படும் குடும்பங்களுக்காக உதவி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூபாய் 3 கோடியை கரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

 

csf

 

''நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம், உங்கள் அனைவருடனும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் அடுத்ததாக, தலைவரின் அனுமதியுடனும், ஆசீர்வாதங்களுடனும் சந்திரமுகி-2 வில் நடிக்கிறேன். இதனால் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்கும் இப்படத்தை பி.வாசு இயக்கவுள்ளார். இந்த படத்திற்காக நான் வாங்கிய அட்வான்ஸ் தொகையில் இருந்து ரூபாய் 3 கோடியை கரோனா வைரஸ் நிவாரண நிதியாக வழங்குகிறேன். இதில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சம், ஃபெப்சி யூனியனுக்கு ரூபாய் 50 லட்சம், மேலும் எனது சிறப்பு பங்களிப்பாக எனது நடனக் கலைஞரின் சங்கத்திற்கு ரூபாய் 50 லட்சம் மற்றும் எனது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ருபாய் 25 லட்சம் மற்றும் தினசரி உழைப்பாளிகளுக்காகவும், எனது பிறந்த இடமான ராயபுரத்தில் உள்ள தேசிய நகர் மக்களுக்கும் ரூபாய் 75 லட்சமும் வழங்கவுள்ளேன். மேலும் அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான பாதுகாப்போடு காவல்துறை உதவியுடன் வழங்கப்படும். சேவையே கடவுள்'' என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதேபோல் தமிழ்நாட்டில் நடிகர் அஜித் கரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு 1.25கோடியும், சிவகார்த்திகேயன் 25 லட்சமும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்