Skip to main content

"சிண்ட்ரெல்லா படத்தில் நடிக்க இதற்காகத்தான் ஒப்புக்கொண்டேன்..." நடிகை ராய் லட்சுமி பேச்சு!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

Raai Lakshmi

 

எஸ். எஸ். ஐ புரொடக்சன் தயாரிப்பில் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி பிரதான வேடம் ஏற்று நடித்துள்ள 'சிண்ட்ரெல்லா' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பிற்கு நடிகை ராய் லட்சுமி உள்ளிட்ட படக்குழுவினரும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் வருகை தந்தனர். இந்த நிகழ்வில் டிரெய்லர், பாடல்கள் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியிடப்பட்டன.

 

இந்த நிகழ்வில் பேசிய நடிகை ராய் லட்சுமி, "நீண்ட நாளைக்குப் பிறகு உங்களை எல்லாம் பார்க்கிறேன். ஒரு பெரிய போருக்குப் பிறகு சந்திப்பதுபோல இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு புன்னகையுடன் கூடிய  உங்கள் முகங்களைப் பார்க்கிறேன். இனி இது தொடரும் என்று நம்புகிறேன். 'சிண்ட்ரெல்லா' ஒரு திகில் பேண்டஸி படம். இது வித்தியாசமான ஹாரர் படம். நிறையத் திகில் படங்களை நீங்களும் நானும் பார்த்திருக்கிறோம். இது வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமாக இருக்கும். காஞ்சனா மற்றும் அரண்மனை போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு, அதே மாதிரி படங்களாகவே எனக்கு வந்தன. ஆனால் அந்த வகை ஒரே மாதிரியான திகில் திரைப்படங்களைத் தேர்வு செய்ய நான் தயங்கினேன். ஆனால் வினூ என்னை அணுகியபோது அதே வகை, என்றாலும் சிண்ட்ரெல்லா என்ற தலைப்பில் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். சிண்ட்ரெல்லா என்ற அந்த ஒரு வார்த்தையில் நான் மனம் கவரப்பட்டேன். சிண்ட்ரெல்லா என்ற பெயரைத் தேவதைக் கதைகளில்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பெயரில் ஒரு திகில் படமா என்று வியந்தேன்.

 

ஆனால் அதையே ஒரு திகில் படமாகக் கூறினால் எப்படி இருக்கும் என்றபடி கதை சொல்ல ஆரம்பித்தார். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இதில் இரண்டு வேடம் என்று முதலில் அவர் சொல்லவே இல்லை .ஆனால் மூன்று வேடம் என்பது தெரியவே தெரியாது. போகப்போக ஒவ்வொரு பாத்திரமாக அவர் விளக்கினார். வேலைக்காரி வேடமும் நான்தான் செய்ய வேண்டும் என்று அவர் சொன்ன போது நான் ஒரு கணம் தயங்கினேன். மறுத்து விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் என் மேல் நம்பிக்கை வைத்துப் பேசினார். கதையில் மனம் கவரப்பட்டு ஒப்புக்கொண்டேன். ஏனென்றால் அந்த அளவிற்கு அவர் என் மேல் நம்பிக்கை வைத்து அதை விவரித்தார். இந்தப்படம் ஒரு பிரமாண்டமான அனுபவத்தைக் கொடுத்தது. படத்தின் பாத்திரங்களின் தோற்றம், ஒளிப்பதிவு, இசை என்று சின்ன சின்ன வேலைகளைக்கூட அனைவரும் குழுவாக இணைந்து செய்தார்கள். படக்குழுவினரின் ஒன்றுபட்ட உழைப்பின் பலனாக இந்த படம் வந்திருக்கிறது. சிண்ட்ரெல்லா தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்