கடந்த மே மாதம் 21 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், பஞ்சாபி பாப் பாடகருமான சித்து மூஸ் வாலா கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இதனைத்தொடர்ந்து பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய பஞ்சாப் போலீஸ் சித்து மூஸ் வாலா கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ப்ரியவாத், சச்சின் பவானி, தீபக், கபில் உள்ளிட்ட நான்கு பேரை அதிரடியாக கைது செய்தது. ஆனால் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அங்கித் சிர்ஸா தப்பிய நிலையில் நேற்று(3.7.2022) முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஏகப்பட்ட துப்பாக்கிகள், மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் பாடகர் சித்து மூஸ் வாலாவை கொலை செய்த பிறகு கொலையாளிகள் துப்பாக்கியுடன் காரில் பயணித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சித்து மூஸ் வாலாவை கொன்ற பிறகு அவரது மரணத்தை கொண்டாடும் வகையில் உள்ள இந்த வீடியோவை கொலையாளிகளில் ஒருவர் தனது போனில் படம்பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.