சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி சிம்பு நடிக்க இருந்த படம் 'மாநாடு'. இப்படத்தின் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஆனால் திடீரென சிம்பு இப்படத்தில் நடிக்க மாட்டார் எனவும் 'மாநாடு' படத்தில் வேறு ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். காரணம் யாராக இருக்குமென்பதை சினிமா ரசிகர்கள் கணித்தார்கள். அடுத்த நாளே சிம்பு தரப்பிலிருந்து 'மகாமாநாடு' என்ற பெயரில் படம் அறிவிக்கப்பட்டவுடன் சர்ச்சை இன்னும் அதிகமானது. சுரேஷ் காமாட்சியை சந்தித்தோம். அவரது இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் 'மிக மிக அவசரம்' படத்தின் பணிகளில் இருந்தார். நமக்கு சிறிது நேரம் ஒதுக்கி பேசினார்...
மாநாடு... என்னதான் நடந்தது?
நான் சிம்புவை ஒரு நடிகராகப் பார்க்காமல் என்னுடைய தம்பியாகத்தான் பார்த்தேன். என்னிடம் நிறைய பேர் 'அவருடன் பழக வேண்டாம், படம் பண்ண வேண்டாம், அவர் படப்பிடிப்பிற்கு வர மாட்டார்' என்று சொன்னார்கள். சிம்பு அவர் மனதில் தோன்றுவதை பேசுகிறார், நல்லவராகத்தான் இருப்பார் என்று நினைத்துதான் அவருடன் இருந்தேன். நான் அவரை தேடிப் போய் படம் பண்ணலாம்னு சொன்னது கிடையாது. அவராகவேதான் என்னிடம் வந்து 'உங்களால் முடியும் நாம் படம் பண்ணலாம்'னு சொன்னார். 'நான் சின்ன தயாரிப்பாளர் எனக்கு யாரும் பைனான்ஸ் பண்ண வர மாட்டார்கள்' என்று சொன்னேன். அவரே நான் உங்களுக்கு தேடிக் கொடுக்கிறேன்னு கூட சொன்னார். எனக்கு நன்றாகத் தெரியும் சிம்பு படத்துக்கு யாரும் பைனான்ஸ் பண்ண மாட்டார்கள். இருந்தும் என்னை நம்பி ஒருவர் பைனான்ஸ் பண்ண முன் வந்தார். எல்லாம் ரெடியாகிப் போகும்போது அவர் மாற ஆரம்பித்தார். இன்னைக்கு ஒன்று சொல்வார் நாளை மற்றொன்று சொல்வார். எல்லாத்தையும் பொறுத்து, கடந்து போனேன். ஒரு ஸ்டேஜ்க்கு மேல என்னால் முடியவில்லை. என்னை நம்பி வந்த பைனான்சியரை கைவிடக் கூடாது என்ற கட்டாயத்தில் இருந்தேன். சிம்புவை நம்பி யாரும் வர மாட்டார்கள். அதைத் தாண்டி வந்தவருக்கு 100 சதவீதம் உண்மையாக இருக்க வேண்டும். என்ற எண்ணத்தில்தான் இந்த முடிவை அறிவித்தேன். எப்படியாவது நான் படம் பண்ணி ஏற்கனவே கமிட் ஆனவர்களுக்கு உண்மையாக இருக்கணும்.
சிம்பு ரசிகர்கள் உங்களுடன் சமூக ஊடகங்களில் பேசி வந்தார்கள். இப்போது அவர்களும் கடும் ஏமாற்றத்தில் இருக்கிறார்களே?
ஆமா... சிம்பு ரசிகர்கள் படத்தை பற்றி அப்டேட் கேட்டுக்கொண்டே இருந்தனர். அப்டேட் சொல்லுங்க அப்டேட் சொல்லுங்கன்னு ரசிகர்கள் போய் சிம்பு கிட்ட கேக்கணும். என்னை கேட்டால் என்ன சொல்வது? நடந்த உண்மையை நான் அவர்களிடம் அப்படியே சொன்னால் அது சர்ச்சை ஆகிவிடும். சிம்பு ட்விட்டர்ல இல்லாததால அவர் பத்திரமா இருக்கார். அவர் தன்னுடன் யாராவது போட்டோ எடுத்து கொண்டால் அதை வச்சிகிட்டே ஓட்டிடுவார். அதுவே அவருக்கு ஒரு படம் பண்ண மாதிரி இருக்கும். அவரோட ரசிகர்களுக்கும் இதுவே போதும்னு அவர் தெளிவாக இருக்காரு. எங்கயாவது போகும்போது ஒரு ஃபோட்டோ, யாரையாவது கட்டிப்பிடிச்சு ஊக்குவிக்கிற மாதிரி ஒரு ஃபோட்டோ அப்பப்ப போட்டு ரசிகர்களை எங்கேஜ்டா வச்சிருக்கார். அதையும் மீறி படத்தை பற்றி யாருக்காவது இன்பாக்ஸ்ல சொன்னால் அதை போன்ல ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்து ட்விட்டர்ல பதிவிட்டிடுருவாங்க.
சிம்பு தரப்பிலிருந்து எதுவும் பேசினார்களா?
நான் படம் ட்ராப்னு சொன்னதுக்குப் பிறகும் கூட பேசிப் பார்த்தேன். அவர் அந்த மனநிலையிலிருந்து மாறவில்லை. நான் இன்னும் ஆசைப்படுவது என்னவென்றால் சிம்பு ஒரு நல்ல கலைஞன், அவர் திரும்பவும் நடிக்கணும். இப்போ அசுரன் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கு. படம் பார்த்தேன், தனுஷை, அவரோட அர்ப்பணிப்பை பாராட்டாம இருக்க முடியாது. யோசித்துப் பார்க்கும் பொழுது எனக்கு சிம்பு மேல் கோபம்தான் வருகிறது. இவ்வளவு திறமை இருந்தும் வீட்டிற்குள் அடைந்துகிடப்பதை பார்த்து கோபம்தான் வருகிறது.
மகாமாநாடு என்று அவர்கள் படம் அறிவித்திருக்கிறார்களே?
அதை அவர்கள் பண்ணுவார்கள். டி.ராஜேந்தர் அண்ணன் பண்ணுவார். 125 கோடி செலவு பண்ணி சிம்புவே டைரக்ஷன் பண்ணாலும் பண்ணுவார். இல்லைன்னா டி.ராஜேந்தர் அண்ணன் பண்ணுவார். என்னிடம் கேட்டால் மாநாடு தலைப்பை கொடுப்பேன். நான் ஆசைப்படுவது, அவர் நடிக்கணும் மீண்டு வரணும். என் மீது எங்கு தவறு உள்ளது? நீங்க கேட்டதுனால நான் வெங்கட்பிரபு கிட்ட பேசி கமிட் பண்ணேன். என்னதான் பிரச்னை என்று அவர்கிட்டதான் கேக்கணும்.