![Priya Bhavani Shankar](http://image.nakkheeran.in/cdn/farfuture/M01dCtS8w1TtbgNrt6nr5vBlT4mH360DPyzFEZ6U-Ew/1631614690/sites/default/files/inline-images/66_30.jpg)
‘24ம் புலிகேசி’ பட சர்ச்சை பூதாகரமானதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க வடிவேலுவிற்குத் தடை விதிக்கப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தடையானது தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிற்கு தயாராகிவரும் வடிவேலு, அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளார். இந்த ஐந்து படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில், சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்திற்கு ‘நாய் சேகர்’ எனப் பெயர் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், 'நாய் சேகர்' என்ற தலைப்பின் உரிமை வேறொரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் உள்ளதால் அந்த உரிமையைப் பெறுவதற்குப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், வடிவேலு - சுராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகக் கடந்த சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவிவருகிறது. இருப்பினும், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தற்போது கிடைக்கும் தகவலின்படி, பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், வடிவேலுவின் ரீஎன்ட்ரி படமாக அமையவுள்ள இப்படத்தில் கதாநாயகி கதாப்பாத்திரம் இல்லை என்றும் கூறப்படுகிறது.