இந்திய சினிமாதுறையில் மிகவும் பிரபலமாகவும், முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் தெலுங்கு திரையுலகில்தான் நிறைய கொண்டாடப்படுகிறார். அண்மையில் அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த அல வைகுந்தபுரமலோ படம் மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும், இந்த படத்தில் அல்லு அர்ஜூன் பூஜா ஹெக்டேவின் கால்களை பார்த்து மயங்குவதுபோல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதுகுறித்து பூஜாவிடம் ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட, அதற்கு பதிலளித்தது சர்ச்சையானது. தெலுங்கு திரையுலகம் குறித்து தவறாக பேசிவிட்டார். இவருக்கு அதிக வாய்ப்பு தரும் தெலுங்கு துறையை தவறாக பேசியிருக்கிறார். இனி இவருக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று பலரும் சமூக வலைதளத்தில் இதை விவாதம் செய்து வந்தனர்.
இந்நிலையில் தான் பேசியதற்கு விளக்கம் அளித்துள்ளார் பூஜா ஹெக்டே. அதில், “நான் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. நான் சொன்னவற்றைத் திரிக்கலாம். ஆனால், தெலுங்கு திரைத்துறை மீது எனக்கிருக்கும் அன்பை திரிக்க முடியாது. சமூக ஊடகங்களில் என்னைப் பற்றித் தீர்மானிக்கும் முன் முழு பேட்டியைப் பாருங்கள்.
தெலுங்குத் திரைத்துறையே எனது உயிர் மூச்சு. எனது படங்களை விரும்பும் என் ரசிகர்களுக்குக்கூட இது தெரியும். தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கை. நான் என்றும் தெலுங்கு திரைத்துறைக்குக் கடன்பட்டிருப்பேன் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.