கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப்பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் ஏற்கனவே ஃபெப்சிக்கு ரூ. 50 லட்சம் வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கரோனா அச்சுறுத்தலால் வேலையின்றி கஷ்டப்படும் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்...
''அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய ரஜினி சார் அவர்களுக்கு,
இன்றைய கோவிட் 19 வைரஸ் எதிர்ப்பில் தொழிலின்றி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் உங்கள் கலை குடும்பத்தின் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு, தாங்கள் இன்று அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெற்றோம். குறிப்பறிந்து கேட்காமலேயே, உங்கள் கலை குடும்பச் சகோதரர்களுக்கு வாரி வழங்கும் தங்கள் உள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை, போற்றுகிறோம். தங்கள் நலமும் புகழும் உயரட்டும், குடும்பம் நீடூழி வாழட்டும்'' எனக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இயக்குனர் பேரரசு ட்விட்டரில் ரஜினிகாந்த் உதவி செய்தது குறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில்,
"ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம். இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகைப் பொருட்கள் வழங்கும் போது "பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம்" என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம் பெற்ற உதவியை நாங்கள் எப்படிச் சொல்லாதிருப்பது!" தெரிவித்துள்ளார்.