Skip to main content

"சினிமா போல் அரசியல் மாறிவிட்டது" - பேரரசு காட்டம்!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

vdgv

 

ஆல்பின் மீடியா தயாரிப்பில், துரைராஜ் இயக்கத்தில் 'டிக்டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே.ராஜன், தமிழ்நாடு ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பி.வி.கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டனர். அப்போது விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது...

 

"இன்று நாடே தேர்தல், கூட்டணி என்று பரபரப்பாக இருக்கின்ற நேரம் இது. இந்த நேரத்தில் இந்தப் பட விழா நடக்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் கதாநாயகனாக நடித்திருப்பதாகச் சொன்னார். அவர் விருப்பப்பட்டு வரவில்லை. வேறு வழியில்லாமல் வந்திருப்பதாகத் தனது சூழ்நிலையைக் கூறினார். இன்று ஆளாளுக்கு கதாநாயகன் ஆக வேண்டும் என்று ஆசையில் வருகிறார்கள். ஆசைப்படுபவர்கள் எல்லாம் கதாநாயகனாக முடியாது. ஆசைப்பட்டால் மட்டும் போதாது. முன்பு குறும்படத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார்கள். இப்போது டிக்டாக்கில் இருந்து சினிமாவுக்கு வருகிறார்கள். இது ஒரு கால மாற்றம். இலக்கியா டிக்டாக்கில் இருந்து வந்திருக்கிறார்.

 

நாம் விதவிதமான உடைகள் உடுத்துகிறோம். ஆனால் எல்லாம் மானத்தை மறைப்பதற்காகத்தான். அதுபோல் நாம் பல வகையான படங்கள் எடுத்தாலும் சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டும்தான். அது காதலைச் சொல்லலாம், நகைச்சுவையைச் சொல்லலாம், அரசியல் பேசலாம், நல்ல கருத்துகளைச் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் சினிமா பொழுதுபோக்கிற்காகத்தான். அதுபோல் சினிமாவில் கவர்ச்சியும் ஓர் அங்கம். இந்தப் படத்தின் கவர்ச்சி வியாபாரத்துக்காக என்று புரிந்துகொள்ள முடிகிறது. எப்போது திரையரங்கில் வர வேண்டிய படம் ஓடிடியில் வெளியானதோ அன்றே சினிமா முழுக்க முழுக்க வியாபாரம் என்றாகிவிட்டது.

 

இன்றைக்கு சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாமல்தான் 90 சதவீதம் பேர் சினிமா எடுக்க வருகிறார்கள். அவர்களுக்கு சினிமா தெரியாது. அப்படிப்பட்டவர்கள்தான் இன்று படம் எடுக்கிறார்கள். சினிமா பொழுதுபோக்காக இருக்க வேண்டும். அரசியல் பொறுப்புடன் இருக்க வேண்டும். ஆனால் இன்றோ பொழுதுபோக்கு நிறைந்த சினிமாவில் அரசியல் வந்துவிட்டது. அரசியல் பொழுதுபோக்காக மாறிவிட்டது. ஆனால் நாம் பொறுப்பாக இருப்போம். இந்த ஏப்ரல் 6 இல் தேர்தல் வருகிறது. எனவே நாம் பொறுப்பாக இருந்து நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். தமிழ்நாட்டைக் காப்பாற்றுவோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்