நடிகர் நெப்போலியன் மற்றும் இசையமைப்பாளரும் நடிகருமாகிய ஜி வி பிரகாஷ் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய கெய்பா இன்க் தலைவரான திருச்சியைச் சேர்ந்த டெல் கே கணேசன் தற்போது ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸின் புதிய பாப் மற்றும் ராப் இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிடுகிறார்.
பாப் மற்றும் ராப் இசை உலகில் தனக்கென ஒரு சொந்த பாணியை உருவாக்கியுள்ள ‘பிக் ஓ’ என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் ஒமர் குடிங், 'களோனியல் கசின்ஸ்' பாடகர் லெஸ்லீ லூஸிஸுடன் இனைந்து ‘என்டூரேஜ்’ பாடலை உருவாக்கியுள்ளார். கெய்பா பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்பாடலுக்கு அஸ்வின் கணேசன் இசையமைத்துள்ளார்.
இப்பாடல் குறித்து உமர் குடிங் கூறுகையில், “இந்த பாடல் எனது வாழ்க்கையை வகைப்படுத்துகிறது, இதன் காரணமாக பாடல் வரிகளுடன் என்னை தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. லெஸ்லீ லூயிஸ் மற்றும் ஏடிஜி உடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த பாடல் காலம் கடந்து வாழக்கூடியது” என்றார்.
தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான ஏடிஜி இப்பாடல் குறித்து கூறுகையில், ”இந்த பாடலை கேட்பவர்களுக்கு ஒரு பரவசமான மற்றும் உற்சாகமான பயணத்தை நாங்கள் மூவரும் வழங்க விரும்பினோம். இசையில் மட்டுமல்லாமல், குரலிலும் ரிதம், ராப் மற்றும் பாப் ஆகியவற்றின் கலவையாக இது உருவாகி உள்ளது. தரத்தில் சமரசம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. பாடல் வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டுள்ளது என்பதை அதை பார்க்கும் போது நீங்கள் உணர்வீர்கள்” என்றார்.
இப்பாடலை தயாரித்துள்ள கைபா பிலிம்ஸ் நிறுவனம், செலிபிரிட்டி ரஷ், கிறிஸ்மஸ் கூப்பன், டெவில்ஸ் நைட் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.