தமிழ்ப் படங்களில் வெட்டு, குத்து, ரவுடியிசம் என்பன பொதுவாக வட சென்னையின் அடையாளங்களாகக் காட்டப்படுகின்றன. ஆனால், இதையும் தாண்டி வடசென்னையின் அடையாளங்களாக இருப்பவை ஏராளம். அதில் கேரம், கால் பந்து, ஜிம்னாஸ்டிக் போன்ற போட்டிகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள், தேசிய அளவில் பல சாதனைகளையும் படைத்து வருகின்றனர். அதுபோல பாக்ஸிங்கிற்கும் அடையாளமாக இருக்கிறது வடசென்னை. தற்போது இந்த வரலாற்றை மையமாக வைத்துதான் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யாவை வைத்து, 'சார்பட்டா பரம்பரை' என்னும் படத்தை இயக்கியுள்ளார்.
அது என்ன பாக்ஸிங்கில் பரம்பரை என்று யோசிக்கிறீர்களா? தற்போது அதிகமாகப் பலரும் பயன்படுத்தும் க்ளப், அகாடமி என்கிற வார்த்தைக்குப் பதிலாக, அப்போது பரம்பரை என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது, எப்படி ஒரு விளையாட்டு வீரருக்கு அடித்தளத்தைக் கற்றுக்கொடுத்து, அவரை ஒரு புரொஃபஷனல் வீரராக மாற்றும் கடமை அந்த க்ளப்பிற்கும் அகாடமிக்கிற்கும் இருக்கிறதோ, அந்தக் கடமைதான் இந்தப் பரம்பரைக்கும் இருந்திருக்கிறது. வடசென்னையை ஆக்கிரமித்த ஆக்ரோஷமான பாக்ஸர்களை உருவாக்கத் தொடங்கி, 80 வருட வரலாறு இதற்குப் பின்னால் இருக்கிறது. ஆனால், இந்த வரலாறு பலருக்கும் தெரியாது.
வடசென்னையில் இந்த 'சார்பட்டா பரம்பரை', காலப்போக்கில் 'சல்பேட்டா பரம்பரை' என்றானது. இதுமட்டுமல்லாமல் மேலும் பல பரம்பரைகள் வடசென்னையில் ஆக்ரோஷமாகப் பயிற்சியெடுத்து பாக்ஸிங் களத்தில் தனது குருதி கலந்த வியர்வையால் மேடையை நனைத்திருக்கிறது. 'சார்பட்டா பரம்பரை', 'இடியப்பன் நாயக்கர் பரம்பரை', 'எல்லப்பச் செட்டியார் பரம்பரை', 'கறியார பாபுபாய் பரம்பரை' இவையெல்லாம் குடும்பப் பரம்பரைகள் அல்ல. வடசென்னை இளைஞர்களுக்கு பாக்ஸிங் கற்றுக்கொடுத்து வளர்த்தெடுத்த பயிற்சி மையங்கள்.
1940லிருந்து 1990 வரையில் வடசென்னை மக்களின் வாழ்வோடு ஒரு அங்கமாக இருந்திருக்கிறது பாக்சிங். வாரா வாரம் பொழுது போக்கிற்காகச் செல்லும் ரசிகனைப் போல, ஞாயிறு மாலை இந்த பப்ளிக் பாக்ஸிங்கை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாகத் திடலுக்கு வந்து கண்டு களித்துள்ளனர். இன்று வடசென்னையிலிருக்கும் நேரு ஸ்டேடியம், கண்ணப்பர் திடல் மற்றும் தண்டையார்பேட்டை மைதானம் போன்று, அன்றிருந்த பொட்டல் மைதானங்களில்தான் போட்டிகள் நடந்தன. மைதானத்தின் நாற்புறமும் தட்டிகள் கட்டி, நடுவில் வீரர்கள் மோதுவதற்கான மேடை அமைத்து, மேடையின் நாலு பக்கமும் கயிறுகள் கட்டப்பட்டு, பரபரப்பாக நடந்த போட்டி ஒவ்வொன்றும் பார்க்கும் மக்களுக்குக் கொண்டாட்டம்தான்.
ஒரு போட்டியை காண குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரசிகர்கள் வருவதுண்டு. பெண்கள் வருவதில்லை. இந்த ஆக்ரோஷப் போட்டிகளை நடத்துவதற்கு என்று அமைப்புகள் இருந்திருக்கின்றன. போட்டிகளில் பெறும் வெற்றியின் அடிப்படையில் வீரர்களுக்கு சம்பளம், தோல்வி பெற்றால் வீரரின் ரேட்டிங் குறைவது என்று முழுக்க முழுக்க புரொஃபஷனல் பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன.
இந்தப் போட்டிகளை மக்கள் மட்டுமல்ல எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற அப்போதைய உச்ச நட்சத்திரங்களும் வந்து பார்த்திருக்கிறார்கள். சென்னை மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் இந்தப் போட்டிகளை காண பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள். சார்பட்டா பரம்பரையும், இடும்பன் நாயக்கர் பரம்பரையும் மோதிக்கொள்வது மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. இந்த பாக்ஸிங்கில் விளையாடிய சிலர் ரவுடியிசத்திலும் ஈடுபட்டது, இந்த விளையாட்டிற்குப் பெரிய தலைவலியானது. களத்தில் தோல்வியடைந்தால், களத்திற்கு வெளியே அதற்காகச் சண்டையிட்டுக்கொள்வது போன்ற வன்முறையால் 1989ஆம் ஆண்டு இந்த ஆட்டத்தை நடத்த தடை விதிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே சில வீரர்கள் இறந்திருக்கின்றனர். சிலர், படுத்த படுக்கையாகி கோமா வரை சென்றுள்ளனர். பொழுதுபோக்காகப் பார்க்கப்பட்ட பாக்ஸிங், ஒரு கட்டத்தில் உச்ச கவனத்தைப் பெறும்போது வன்முறை, கலவரம், பகை என்று விளையாட்டை மீறிய ஒன்றாக மாறியதுதான் தடைக்கு முக்கிய காரணம் என்று சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த வடசென்னையில் நடைபெற்ற பாக்ஸிங்கில் இருந்திருக்கிறது.
உலகளவில் பெரும் தொகை பெரும் வீரர்களில் புரொஃபஷனல் பாக்ஸர்களும் இருக்கின்றனர். வன்முறை, ரவுடியிசம் இன்றி இந்த பாக்ஸிங் போட்டி விளையாட்டாகவே சென்றிருந்தால், வடசென்னையில் உருவான பல இளைஞர்கள் இன்று முகமது அலிகளாகவும், மைக் டைசன்களாகவும் வடசென்னையின் அடையாளமாக மட்டுமல்லாமல், இந்தியாவின் அடையாளங்களாகி, பல இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாகி இருப்பார்கள்.