கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருவதால், முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதுதொடர்பான ஸ்க்ரீன்ஷாட்டுகளும் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆசிரியரின் இந்த செயல் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், ஆசிரியரின் இந்த செயலுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துப் பதிவு செய்துள்ளார். அதில்...
"பி.எஸ்.பி.பி பள்ளி சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளியை வெளி உலகுக்குச் சுட்டிக்காட்டிய சிறுமிகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அந்த அரக்கனுக்கு எதிராக முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.