
கடந்த 2019 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் கோலமாவு கோகிலா. ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண், குடும்பச் சூழலினால் கொக்கைன் கடத்தல் கும்பலில் சேர்ந்து கடத்தலில் ஈடுபடுகிறார். பின்னர் அதிலிருந்து அவர் வாழ்க்கை எப்படி மாறியது என்பதை காமெடி கலந்து சுவாரசியமாகச் சொல்லியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இப்படம் தற்போது 'குட் லக் ஜெர்ரி' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. நயன்தாரா கதாபாத்திரத்தில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படம் கடந்த வாரம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியானது.

இந்நிலையில் 'குட் லக் ஜெர்ரி' படத்தின் ட்ரைலரை பார்த்து நயன்தாரா பாராட்டியதாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “'குட் லக் ஜெர்ரி' படத்தின் ட்ரைலரை பார்த்து நடிகை நயன்தாரா வெகுவாக பாராட்டியதாக கேள்விப்பட்டேன். அதன் பிறகு அவரின் தொலைப்பேசி எண்ணை வாங்கி நீங்கள் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று மெசேஜ் அனுப்பினேன். இதற்கு, “கோகிலா எனது மனதிற்கு நெருக்கமான படம். இந்த மாதிரியான கதாபாத்திரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து நடிப்பது பெருமையாக இருக்கிறது. 'குட் லக் ஜெர்ரி' ட்ரைலர் நன்றாக இருந்தது. உங்களை தவிர வேறு யாராலும் ஜெர்ரி கதாபாத்திரத்தில் யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது என்று நயன்தாரா பதிலளித்ததாக கூறியுள்ளார்.