இந்தி சினிமாவில் காமெடி, வில்லன், ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நவாசுதீன் சித்திக். தமிழில் ரஜினியின் 'பேட்ட' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே தனது இரண்டாவது மனைவி ஜைனப் என்கிற அலியாவுக்கும் இவருக்கும் சமீபகாலமாகத் தொடர்ந்து பிரச்சனை எழுந்து வருகிறது. நவாசுதீன் சித்திக் அலியாவை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டு அலியா விவாகரத்து கேட்டு பின்பு அதைத் திரும்பப் பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு அலியா மீது நடிகரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவருக்கும் சொத்து தகராறு எனக் கூறப்பட்டது. இதனிடையே நவாசுதீன் சித்திக் தன்னைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வருவதாகக் கூறி அலியா புகார் அளித்தார். மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பின்பு இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் காத்து வந்த நவாசுதீன் சித்திக் சமீபத்தில் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், அலியா அதிக பணத்தை மட்டுமே விரும்புவதாகவும் பணம் கொடுத்தால் வழக்கைத் திரும்பப் பெற்றுவிடுவார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் முன்னாள் மனைவி அலியா மற்றும் தனது தம்பி சம்சுதீன் சித்திக் மீது ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு மும்பை ஐகோர்ட்டில் நவாசுதீன் சித்திக் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், சம்சுதீன் சித்திக்கை மேலாளராக நியமித்ததாகவும் அந்த பொறுப்பை பயன்படுத்தி அவர் தன்னிடம் மோசடியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த மோசடி தெரிந்து அவரிடம் கேட்டதனால், எனது முன்னாள் மனைவி அலியாவை எனக்கு எதிராக திருப்பி புகார் அளிக்க தூண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வருகிற 30 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதனிடையே அலியா, நவாசுதீன் சித்திக்குடன் விரைவில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறுவேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.