சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் என்ற ஒன்றை தொடங்கி அதன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் புதுமுகங்களை அறிமுகம் செய்து வருகிறார் சிவா. இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படம் ‘கனா’. சிவாவின் நண்பரும், பிரபல காமெடி நடிகருமான அருண்ராஜா காமாராஜை இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வசூல் வேட்டை செய்தது. கடந்த வருடத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகவும் இது இருந்தது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவா தனது தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டாவது படத்தை தயாரிக்க இருப்பதாகவும். பிரபல யூ ட்யூப் சேனல் பிளாக் ஷீப் குழுதான் அந்த படத்தில் பணிபுரிய உள்ளதாகவும், ரியோ ராஜ் ஹீரோ நடிக்கிறார் என்று அறிவிப்பு விட்டிருந்தார். நேற்று அந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
மேலும் இந்த படத்தில் நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத் இவ்விழாவில் கலந்துகொண்டு பேசும்போது, “தகுதியுள்ள தமிழர்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகிற தகுதியைப் பெற்றுள்ள சிவகார்த்திகேயனுக்கு என் முதல் நன்றி.
நான் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒரு புள்ளியைப் போட்டவன் தம்பி ரேடியோ மிர்ச்சி ஷா. இப்போது ஒரு பாடல் பார்த்திருப்பீர்கள். அதுவொரு தனியார் தொலைக்காட்சியில் என்னைக் காயப்படுத்த வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 'துப்புனா துடைச்சிக்குவேன்' என்று பதில் சொன்னேன். அது எனக்கே வந்து ஆப்பா அமையும் என்று நினைக்கவில்லை. இப்போது துப்புனா துடைச்சிக்கலாம் போல என்று தான் தெரிகிறது.
என் மண்ணைச் சேர்ந்த கார்த்திக் வேணுகோபாலன் இயக்குநராக இந்தப் படத்தில் முத்திரை பதித்துள்ளான். ஒளிப்பதிவாளர் யு.கே. மாதிரி உடை போட்டு நடக்கணும் என்று எனக்கொரு ஆசையுண்டு. ஆயிரம் கவலைகள் இருந்தாலும் படப்பிடிப்பில் யு.கே.செந்தில்குமாரை பார்த்துவிட்டேன் என்றால் பூவாக மலர்ந்து விடுவேன். தலைப்புகளில் பேசி 42 தங்கப் பதக்கங்களைப் பெற்றவன். 'எனக்கு முடிவே இல்லை' என்ற தலைப்பில் பேசச் சொல்லியுள்ளார்கள்.
சினிமா இதழ்கள், தினசரி பேப்பர்களில் வரும் சினிமா செய்திகள் என எதையும் படிப்பதில்லை. நான் சினிமாவுக்கு ரொம்ப அந்நியமானவன். ஆனால், இந்தப் பாடலைப் பார்த்தப் பிறகு சினிமாவில் இனி நாஞ்சில் சம்பத்துக்கும் இனி முடிவே இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறினார்.