தெலுங்கு மூத்த நடிகரான மோகன் பாபு சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் மோகன் பாபு தனது இளைய மகன் மனோஜ் மஞ்சு மீது சொத்து தகராறு தொடர்பாக ரச்சகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மனோஜும் அவரது மனைவி மோனிகாவும் 30 பேர்களை கொண்டு தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை மிரட்டியதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதை மறுத்த மனோஜ் மஞ்சு, சொத்துக்காக போராடவில்லை, சுயமரியாதைக்காக போராடுகிறேன் என செய்தியாளர்களிடம் கூறினார். இதனிடையே மனோஜும் மோகன் பாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து கடந்த 10ஆம் தேதி மனோஜ் மஞ்சு, அவரது மனைவி மோனிகா மற்றும் இன்னும் சிலர் ஜல்பல்லியில் உள்ள மோகன் பாபுவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது வீட்டின் பாதுகாவலர்கள் கேட்டை திறக்க மறுக்க இதனால் மனோஜுக்கும் பாதுகாவலர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்பு கேட்டை தள்ளி மனோஜ் உள்ளே நுழைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட இந்த தகவல் அறிந்து அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை வீட்டை விட்டு வெளியே வந்த மோகன் பாபு அவர்களது மைக்கை பிடித்து தூக்கி எறிந்த படி தாக்கினார். இது தொடர்பாக் மோகன் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மோகன் பாபு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதாக தகவல் வெளியானது. மேலும் அவரிடம் காவல் துறையினர் வாக்கு மூலம் சேகரிக்க சென்ற போது அவர் இல்லை என்றும் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பதாகவும் கூறப்பட்டது. அதோடு அவர் வழக்கில் இருந்து விடுவிக்க முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் மோகன் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அவர் பகிர்ந்திருப்பதாவது, “பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முன்ஜாமீன் நிராகரிக்கப்படவில்லை, தற்போது. நான் எனது வீட்டில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.