மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வழக்குகளில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீரா மிதுன் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுனும் அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இது தொடர்பாக மீரா மிதுனுக்கு எதிராக 2ஆவது முறை பிடிவாரண்ட் பிறப்பித்து அதுவும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணை வருகிற 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் மீரா மிதுனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.