
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'கைதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்துவிட்டாலும், கரோனா நெருக்கடி காரணமாகத் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்ததையடுத்து, படம் வரும் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு ஒரு அப்டேட் வெளியாகுமென படக்குழு அறிவித்தது. அதன்படி, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எப்படி எங்களோட சர்ப்பிரைஸ்? என ரசிகர்களை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சண்டைக்காட்சியில் ஈடுபடும் வகையிலான அந்தப் போஸ்ட்டரைக் கண்ட ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.