மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. சிதம்பரம் இயக்கியிருந்த இப்படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் பலர் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தனர். பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படம் ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற சாதனையைப் பெற்றது. இதனிடையே கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் இப்படத்தில் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் படத்தின் லாபத்திலிருந்து 40 சதவீதம் பங்கை படத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி தருவதாகக் கூறி ஏமாற்றியதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்கவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர், அதில் முன்கூட்டியே இந்த மோசடி செய்யத் திட்டமிட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பாளரான சவுபின் ஷாயிர் அலுவலகங்களில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் சவுபின் ஷாஹிர் ரூ.60 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் பண மோசடி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுதொடர்பாக சவுபின் ஷாஹிரிடம் அடுத்தகட்ட விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் சவுபின் ஷாயிர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.