மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி வெளியான படம் 'மண்டேலா'. திரையரங்க வெளியீடு இல்லாமல் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்னர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், 'மண்டேலா' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான இந்திய அரசின் பரிந்துரைக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது பிரிவிற்கு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் வெளியான படங்களில் சிறந்த படம் ஒன்றை தேர்வு செய்து அனுப்புவது வழக்கம். அந்தப் படங்கள் ஆஸ்கர் விருது தேர்வு குழுவினரால் மதிப்பிடப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட படத்திற்கு சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்படும்.
அந்த வகையில், இந்த வருடத்திற்கான இந்திய அரசின் பரிந்துரைக்கான தேர்வு பட்டியலில் யோகி பாபுவின் மண்டேலா திரைப்படம் உட்பட மொத்தம் 14 படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் 14 படங்களையும் இயக்குநர் ஷாஜி என். கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு பார்த்து, அதிலிருந்து ஒரு படத்தைத் தேர்வுசெய்து இந்தியாவின் ஆஸ்கர் பரிந்துரையாக அனுப்ப உள்ளது.
சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் பிரிவிற்கு கடந்த ஆண்டு இந்திய அரசு சார்பில் ரன்வீர் சிங்கின் 'கல்லி பாய்' திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.