Skip to main content

"பிரதமர் மோடி செய்ததைப் பேரழிவு என்றார்கள், ஆனால் தற்போது கதையே மாறிவிட்டது" - மாதவன் புகழாரம்

Published on 20/05/2022 | Edited on 20/05/2022

 

madhavan praise pm narendra modi digital economy

 

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா 2022' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் மே 17-ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மத்திய  தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில்  திரைபிரபலங்கள் கமல்ஹாசன், பா.ரஞ்சித், நவாசுதீன் சித்திக், ஏ.ஆர் ரஹ்மான், மாதவன், தமன்னா, ஊர்வசி ரவ்டலா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் அடங்கிய குழு கலந்து கொண்டுள்ளது. இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாதவன் நடித்து இயக்கியுள்ள 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' திரைப்படம் நேற்று (19.5.2022) திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்து பலரும் பாராட்டினர். 

 

இந்நிலையில் இவ்விழாவில் பேசிய நடிகர் மாதவன் பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "பிரதமர் மோடி நாட்டில் முதல் முறையாக நுண் பொருளாதார நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகப்படுத்திய போது பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒரு விவசாயிக்கும், படிக்காத ஏழை, எளிய மக்களுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றியும் ஆன்லைன் கணக்கு பற்றியும் எப்படி சொல்லித் தரப்போகிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த முயற்சி இந்திய பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்தனர். ஆனால் இரண்டு  ஆண்டுகளுக்கு பிறகு கதையே மாறிவிட்டது. உலகிலேயே தற்போது டிஜிட்டல் பொருளாதாரத்தை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது ஏன் நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் இந்திய விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி கற்றுத்தர வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இது தான் புதிய இந்தியா" எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர்  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்