இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார். மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளி என முத்திரை குத்தப்பட்டு, அதன்மூலம் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன். பின்னாட்களில் அவர் நேர்மையானவர் என நிரூபிக்கப்பட்ட போதிலும் அவர் எதிர்கொண்ட இன்னல்களும் துயரங்களும் சொல்லி மாளாதவை. அவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் படம் என்பதால், படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்பு அதிகமானது.
இப்படத்தின் ட்ரைலர் முட்டாள்கள் தினம் எனக் கூறப்படும் ஏப்ரல் 1-ஆம் தேதியான நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ட்ரைலரை முட்டாள்கள் தினத்தன்று வெளியிட்டது ஏன் என்பது குறித்து நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஒரு படம் என்பதைத் தாண்டி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த இந்த நாட்டின் கவனிக்கப்படாத நாயகர்களுக்கான காணிக்கை. சமூகத்திற்கு அளித்த பங்களிப்பிற்காக அவர்கள் கொண்டாடப்பட வேண்டும். அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்தப் புகாரும் கூறாமல் கடினமாக உழைத்து அதிகம் சாதித்தவர்கள். ஒரு முறை நம்பி நாராயணன் சாரிடம் நான் பேசிக்கொண்டு இருக்கும்போது 'தங்களுடைய தேசப்பற்று காரணமாக எத்தனை எத்தனை முட்டாள்கள் இங்கு பலிகடாவாக்கப்பட்டுள்ளனர் மாதவன்' என்றார். ஆகையால், எங்களது காணிக்கையை கவனிக்கப்படாத நாயகன் நம்பி நாராயணன் சாருக்கு செலுத்தி, இந்தத் தினத்தை இது போன்ற முட்டாள்களுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தோம்" என உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.