மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 1 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசையோடு சேர்த்து டிரைலரும் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில் டிரைலர் வெளியாகவில்லை. மேலும், வருகிற 29 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக உதயநிதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரை பார்க்கையில், வடிவேலுவின் குரலில், அவர் ஒரு பாடகர் என்றும் ஒரு பாடலைத்தான் பாடினாலும் அதை தெரு தெருவாக கொண்டு சேர்ப்பேன் என்கிறார். கடைசியாக "உண்மையை தேடிக்கொண்டிருக்கும் காதுகளை நான் தேடி கொண்டிருப்பேன்" எனப் பேசுகிறார். அரசியல்வாதியாக வரும் பகத் பாசில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் படிக்கும் கல்லூரியில் மற்றும் அவர்களது சொந்த ஊரில் சில பிரச்சனை செய்கிறார். அதனால் அவருக்கும் இவர்களுக்கும் இடையேயான பிரச்சனைகளை விரிவாக கூறுவது எடுத்துரைப்பது போல் தெரிகிறது.
மேலும் உதயநிதி கோபத்துடன் பேசும், "ஊருக்குள்ள வந்தா கொன்றுவீங்களா டா..." என்ற வசனம், கீர்த்தி சுரேஷ் பேசும், "இங்க மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதான்னு யோசிச்சோம்னா நமக்கு பைத்தியமே புடிச்சிரும்" என்ற வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரைலரின் இறுதியில் வடிவேலும் உதயநிதியும் ஒரு வீட்டில் உள்ளனர். வீட்டின் கதவை சுற்றி வில்லன்கள் உடைத்து அவர்களை அடிப்பதற்கு முயல்கின்றனர். அவர்களோடு சண்டையிடத் தயாராக இருவரும் சேர்ந்து உள்ளார்கள்.
உதயநிதி முன்பு குறிப்பிட்டது போல இப்படம் வருகிற 29ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.