நடிகர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் எனத் தமிழ்த்திரையுலகில் பன்முகம் கொண்டவரான நடிகர் சிம்புவிற்கு சமீபத்தில் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது வேல்ஸ் பல்கலைக்கழகம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடின உழைப்பினால் இன்று முன்னணி நடிகர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ள சிம்புவின் திரைத்துறை பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த டாக்டர் பட்டமானது அவருக்கு வழங்கப்பட்டது. சிம்புவிற்கு முன்னதாக எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழ்த்திரையுலகில் யார் யார் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்கள், எந்தப் பல்கலைக்கழகம் அவர்களுக்கு வழங்கியது என்பதைப் பார்ப்போம்.
எம்.ஜி.ஆர். -
தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலிலும் அசைக்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவருக்கு 1974ஆம் ஆண்டு அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் அமைந்துள்ள உலக பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அதேபோல 1987ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
சிவாஜி கணேசன் -
1952ஆம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய அளவில் மிகப்பெரும் நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன். இவருக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் 1986ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
கமல்ஹாசன் -
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர், இயக்குநர், பாடகர் எனப் பல தளங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து உலக நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்தவர் கமல்ஹாசன். இவருக்கு கடந்த 2005ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
விவேக் -
அண்மையில் காலமான நகைச்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக்கிற்கு கடந்த 2015ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
விஜய் -
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் விஜய்க்கு கடந்த 2007ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அந்தச் சமயத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகளை ஒருசேரப் பெற... தன்னுடைய பெயரை எழுதும்போது டாக்டர் பட்டத்தைக் குறிப்பிடவேண்டாம் என மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தினார். அதன் பிறகு, விஜய்யின் பெயர் எந்த இடத்திலும் டாக்டர் விஜய் எனக் குறிப்பிடப்படவில்லை.
விக்ரம் -
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரும் ரசிகர்களால் சியான் என அன்போடு அழைக்கப்படுபவருமான விக்ரமிற்கு கடந்த 2011ஆம் ஆண்டு இத்தாலியின் மிலன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
விஜயகாந்த் -
90களில் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் விஜயகாந்த், பின் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு தமிழக எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். இவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ப்ளோரிடா பகுதியில் அமைந்துள்ள இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சர்ச் மேனேஜ்மேண்ட் அமைப்பு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.