தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2019-2021 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் பங்கேற்ற இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனர் சங்கம் குறித்து பேசியபோது....
''நான் நம் இயக்குனர் சங்கத்திற்கு ஒரு யோசனை கூற ஆசைப்படுகிறேன். ஒரு படம் ரிலீசானால் அந்த படத்தின் இயக்குனர் டைரக்டர் சங்கத்திற்கு ரூ.25000 தரவேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன் சட்டம் இருந்தது. அப்போது அந்த சட்டத்தை நானும், பி.வாசுவும் பின்பற்றினோம். பிறகு சில ஆண்டுகள் கழித்து நாளடைவில் அந்த சட்டம் மறைந்து விட்டது. தற்போது மீண்டும் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். வருடத்திற்கு குறைந்தபட்சம் 50 பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிறது. கண்டிப்பாக பெரிய பட இயக்குனர்கள் குறைந்தது ரூ.1 கோடி சம்பளம் பெறுகின்றனர். அவர்கள் இக்காலத்திற்கேற்ப குறைந்தபட்சம் தங்கள் சம்பளத்தில் இருந்து ரூ.1 லட்சம் இயக்குனர் சங்கத்திற்கு கொடுத்தால் வருடத்திற்கு ரூ.50 லட்சம் சங்கத்திற்கு வருமானமாக கிடைக்கும். ஏனென்றால், நாம் எதாவது விழா கொண்டாடினால் அதற்கு ஏன் இவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்று ஏளனம் செய்கின்றனர். முதலில் நம் சங்கத்திற்கு நாம் பணம் கொடுத்துவிட்டு பிறகு போதவில்லை என்றால் மற்றவரிடம் நன்கொடை கேட்பதில் தவறு இல்லை. அதேபோல் சிறிய படங்களின் இயக்குனர்கள் அவர்களுக்கு தகுந்தாற்போல் ரூ.2000மோ, ரூ.5000மோ சங்கத்திற்கு கொடுத்தால் போதுமானதாக இருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம். எதோ நான் வைக்கிற தீயை வைத்துவிட்டேன். நன்றி வணக்கம்'' என்றார்.