Skip to main content

"நாட்டுப்புற பாடல்னா அசிங்கமா நினைப்பாங்க..." பாடகி கிடாக்குழி மாரியம்மாள் உருக்கம்!

 

mariyammal

 

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம், ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்டா வரச் சொல்லுங்க...' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. நாட்டுப்புற பாடகி கிடாக்குழி மாரியம்மாள் குரலில் வெளியான இப்பாடல், யூ-டியூப்பில் வைரல் ஹிட் அடித்துள்ளது. பலரும் தன்னையறியாமல் இப்பாடலை முணுமுணுத்துக்கொண்டிருக்கும் வேளையில், பாடகி கிடாக்குழி மாரியம்மாளோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக உரையாடினோம்.

 

'கண்டா வரச் சொல்லுங்க...' பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பாடகராக நீங்கள் முதலில் பாடிய பாடல் எது? 

 

ரொம்ப சின்ன வயசுலயே பாட ஆரம்பிச்சிட்டேன். கிராமப்புறத்தில் 'இளங்கன்று பயமறியாது'ன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரிதான் என்னுடைய இளமைக்காலம் இருந்தது. அது வேற மாதிரியான சந்தோசம் நிறைந்திருந்த காலம். இருந்தாலும், என்ன பாடல்னு சரியா நினைவு இல்லை.

 

இத்தனை வருசமா பாடிக்கிட்டு இருக்கீங்க. இதுவரை கிடைக்காத வரவேற்பு இந்தப் பாடலுக்குக் கிடைத்துள்ளது. அதை எப்படிப் பார்க்குறீங்க?

 

இதுதான் உண்மையான வெற்றி. அதே நேரத்தில் என்னுடைய முதல் வெற்றியும் இதுதான். இனி தொடர்ந்து வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். 

 

கேமராவிற்கு முன் நின்ற அனுபவம் எப்படி இருந்தது?

 

இந்த அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது. இதுக்கு முன்னாடி நாட்டுப்புறப் பாடல்களுக்கு எங்களை வைத்து ஷூட்டிங் பண்ணியிருக்காங்க. அது சிறிய அளவில் இருக்கும். இது சினிமா என்பதால் பெரிய பெரிய கேமரா வைத்து எடுத்தார்கள். இந்த நடிகர் நல்லாவே நடிக்கலைனு நாம் வீட்டில் உட்கார்ந்து ஈஸியா சொல்லுவோம். நானே அப்படிச் சொல்லியிருக்கிறேன். ஆனால், நடிப்பு எவ்வளவு கஷ்டம்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்.

 

sakra

 

பாடலை அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். நடிகர் தனுஷிடம் இருந்து ஏதாவது பாராட்டு வந்ததா?

 

இல்லையே. அதுதான் பெரிய வருத்தமா இருக்கு. ஊர் உலகத்துல இருக்கிற எல்லாரும் ஃபோன் பண்ணி வாழ்த்துச் சொல்றாங்க. தனுஷ் இன்னும் ஃபோன் பண்ணலையேன்னு நினைச்சு அழுகையே வந்திருச்சு. ஆனால், நிச்சயமா ஃபோன் பண்ணுவார்னு நினைக்கிறேன்.

 

நாட்டுப்புற பாடகரா உங்கள் ஆரம்பக்கால கேரியரில் மதுரை ராம்ஜி ஆடியோ முக்கியப் பங்கு வகித்துள்ளது. அதைப் பற்றி கூறுங்கள்?

 

அவர்களோட பங்குதான் அந்தக் காலத்தில் முக்கியமானதாக இருந்தது. அப்போதெல்லாம் பாடுறதுக்கு காசு ரொம்ப கம்மிதான். தொடர்ச்சியான கச்சேரிகள் இருக்கும். ஒரே நாள்ல எட்டு பாடல்வரை பதிவு செய்வார்கள். எந்தக் குறையும் சொல்லமாட்டார்கள். கணக்குப் பார்க்க முடியாத அளவுக்கு கேசட் போட்டாங்க. அதெல்லாம்தான் என்னை இந்த அளவிற்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. 

 

பாடலைப் பாடும்போது உங்களுக்குள் என்ன மாதிரியான உணர்வு ஏற்பட்டது?

 

இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதியிருந்த வரிகள் ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருந்தது. அவர் மனசுக்குள் எவ்வளவு போராட்டங்கள், சங்கடங்கள், வேதனைகள், வெறுப்புகள் இருந்திருந்தா, இந்த மாதிரியான வரிகள் வெளிப்படும் என்பதை என்னால் உணர முடிந்தது. அதை சரியாகப் பாடியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

 

சமீபத்திய சினிமாக்களில் நாட்டுப்புறப் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை எப்படிப் பார்க்குறீங்க?

 

நாட்டுப்புறக் கலை என்பது மண்ணின் கலை. நாட்டுப்புற பாடல் என்றாலே ஒருகாலத்தில் அசிங்கமாக நினைப்பாங்க. இன்றைய படங்களில் அவை தலையோங்கி நிற்பது எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்