
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில் நடிப்பில் உருவான மூன்று திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. பின் அரசு அளித்த தளர்வுகளுக்கு ஏற்ப திரையரங்குகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. இருப்பினும் போதிய ரசிகர்கள் வரவின்மையால் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவதையே பெரும்பாலான தயாரிப்பாளர்கள் சரியான தேர்வாக கருதுகின்றனர். அந்த வகையில், ஃபகத் பாசிலின் ’சி யூ ஸூன்’, ’இருள்’ மற்றும் ’ஜோஜி’ ஆகிய திரைப்படங்கள் அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் தளங்களில் வெளியாகின. இது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட்டால் ஃபகத் பாசிலின் படங்களை எதிர்வரும் காலங்களில் திரையிட மாட்டோம் என கேரள திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாக சில தினங்களாகவே தகவல்கள் பரவி வந்தன. நடிகர் திலீப், தயாரிப்பாளர் பி. உன்னிகிருஷ்ணன் ஆகியோர் ஃபகத் பாசிலிடம் இது தொடர்பாக முடிவெடுக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், கேரள திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக பரவும் செய்திகள் அனைத்தும் புரளிகள் என்றும், ஃபகத் பாசிலிடமோ அவர் நடித்திருக்கும் படங்களாலோ எங்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்றும், எல்லாத் தரப்புடனும் நாங்கள் நல்ல நட்போடு இருக்கிறோம் என்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், ஃபகத் பாசிலிடம் விளக்கம் கேட்டதாக பரவிய தகவலை தயாரிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
கேரள திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அளித்துள்ள இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாலிக்’ திரைப்படம் ஈகைத் திருநாள் அன்று எவ்வித சிக்கலுமின்றி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.