Skip to main content

'விஸ்வாசம்’ படம் போல் இந்தப் படமும் வரவேற்பை பெறும்' - கரு.பழனியப்பன்

Published on 25/01/2019 | Edited on 26/01/2019
karu pazhani

 

கே.இ.ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜு முருகனின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா 25-01-2019 அன்று நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜாவின் தந்தை ஈஸ்வரன், இயக்குனர் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச். வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன், எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல், நடிகர் சன்னி ஜி, ரமேஷ் பாபு மற்றும் இப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட கரு.பழனியப்பன் பேசியது...

"சரவணன், யுகபாரதி, ராஜு முருகன் ஆகியோர் கஷ்டப்பட்டு தான் வளர்ந்தார்கள். சரவணன் இயக்குனராக ஆசைப்பட்டு அவரது தம்பி ராஜு முருகனை இயக்குனராக்கினார். தற்போது சரவணனும் இயக்குனராகி விட்டார். இருப்பதிலேயே கஷ்டமான தொழில் சமைப்பது தான். அதில் திறமை வாய்ந்தவர் ஹீரோ ரங்கராஜ். இந்த படத்திலும் அவர் அறுசுவை விருந்தாக படத்தை கொடுப்பார். தற்போது விஸ்வாசம் போன்ற குடும்ப படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் இந்த படமும் இருக்கும்.”


 

சார்ந்த செய்திகள்

Next Story

சீமான், கமல் போன்றோரும் பா.ஜ.க.வின் வேட்பாளர்கள்தான்! - கரு.பழனியப்பன் பேச்சு

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

ddd

 

திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து, பெல் நிறுவனம் அருகே தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டு உரையாற்றினார். 

 

அதில், “பொதுவாக தமிழ்நாட்டில் தேர்தல் என்பது இருபெரும் கட்சிகளுக்கிடையேயான போட்டியாக இருந்தது. காங்கிரஸ் - திமுகவிற்கும், அதன் பின்பு திமுக - அதிமுக ஆகிய கட்சிகளுக்கும் போட்டியாக இருந்தது. ஆனால் இந்தமுறை மக்கள் நலன் குறித்து சிந்திப்பவர்கள் ஓர் அணியாகவும், மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டவர்கள் ஓர் அணியாகவும் போட்டியிடுகிறார்கள். ஸ்டாலின் எனும் ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்துவிடக் கூடாது என்பதற்காக மோடி முதல் கமல்ஹாசன் வரை விரும்புகிறார்கள்.

 

1989இல் ஜெயலலிதா மோசமாக நடத்தப்பட்டார் என மோடி தற்போது பேசியிருக்கிறார். அதன் பின்பு பலமுறை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கு வழக்கு போடவில்லை. ஏன் என்றால், அந்தச் சம்பவம் உண்மையில்லை. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கலைஞர், கல்லூரியில் கட்டண சலுகை வழங்கினார். தற்போது ஸ்டாலின் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார். இதுதான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சி. 

 

நகர அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்கிற அறிவிப்பு இலவச திட்டம் அல்ல. இலவசங்கள் மக்களை சோம்பேறிகளாக்கிவிடாது. அது பெண்களுக்கான மாபெரும் விடுதலை. தமிழ்நாட்டில் அனைத்து மத மக்களும் இணக்கமாக வாழ்ந்து வரும் நிலையில், மத வேறுபாட்டைத்தான் முதலில் நுழைக்கப் பார்கிறார்கள். இது பெரியார் மண்ணா என கேட்ட பாஜகவினர், இன்று அவ்வாறு பேச மாட்டார்கள். வாக்கு பெற பெரியார் படத்திற்கு மாலை போடக் கூட அவர்கள் தயங்கமாட்டார்கள். 

 

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க என்பது கரோனாவை விட கொடியது. அது வேகமாக பரவக்கூடியது. அதை நாம் பரவவிடக்கூடாது. உழைக்கும் தொழிலாளிகளை மேலும் சுரண்டவே பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குகிறார்கள். அனைத்து உரிமைகளையும் பறிப்பதற்காகவேதான். எந்தப் பொதுத்துறை நிறுவனங்களையும் தொடங்காத மோடி, பொதுத்துறை நிறுவனங்களை அம்பானியிடம் கொடுப்பதா, அதானியிடம் கொடுப்பதா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

 

அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் வென்றால்கூட, அது பாஜக வென்றதைப் போன்றதுதான். இந்த நாடு பாஜகவால்தான் உடையப்போகிறது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணித்தால் யாரும் தாங்க மாட்டார்கள். இந்தத் தேர்தல் ஆரியத்திற்கும் - திராவிடத்திற்கும் நடக்கும் போர்; இந்தத் தேர்தல் சித்தாந்தத்திற்கிடையே நடக்கும் சண்டை. பாஜகவை தோல்வியடைய வைப்பது மட்டுமல்ல, அவர்கள் கூட்டணியில் இருக்கும் அனைவரையும் தோல்வியடையச் செய்து, தேர்தல் குறித்து இனி அவர்களை சிந்திக்கவிடக் கூடாது.

 

முதலமைச்சரைத் தவிர வேறு எந்த அமைச்சரும் தங்கள் தொகுதியைத் தவிர வேறு எங்கும் பிரச்சாரம் செய்ய போவதில்லை. சீமான், கமல் போன்றோரும் பாஜகவின் வேட்பாளர்கள்தான். அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றிபெற செய்ய வேண்டும்.” என்றார்.

 

 

Next Story

"இது இயக்குனர் சங்கமா இல்லை கேளிக்கை விடுதியா?” - கோபப்பட்ட கரு. பழனியப்பன்

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

அண்மையில் நடந்த தமிழ் திரையுலக இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழுவில் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்தனர்.
 

karu.pazhaniyappan

 

 

இதனை இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் விமர்சித்தார். இதனையடுத்து திடீரென இயக்குநர் பாரதிராஜா ராஜினாமா செய்தார்.

தற்போது தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. வருகிற 14ஆம் தேதி நடப்பதாக இருந்த தேர்தல் 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இன்று வடபழனியில் இயக்குநர் சங்க பொதுக்குழு நடைப்பெற்று வருகிறது. அப்போது பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், “எப்படி நீங்களாகவே பாரதிராஜாவை தலைவராக தேர்வு செய்யலாம்? அனைத்து உறுப்பினர்களிடம் இது கேட்கப்பட வேண்டுமா இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் கரு.பழனியப்பனின் பேச்சை பாரதிராஜாவின் ஆதரவாளர்கள் எதிர்த்தனர். இதனால் அவ்விடத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் பேசிய கரு.பழனியப்பன்,  “இது என்ன இயக்குநர் சங்க அலுவலகமா இல்லை கேளிக்கை விடுதியா என்று தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டில்களாக இருக்கிறது” என்று புகார் கூறினார்.

இந்த பொதுக்குழுவில் வேட்புமனு தாக்கல் மற்றும் வாபஸ் குறித்த தேர்தல் அட்டவணை வெளியிடப்படுகிறது.

இயக்குநர் சங்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணைச்செயலாளர்கள், 17 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.