திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 மசோதாவை கடந்த ஜூன் 18ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த மசோதாவுக்குப் பல்வேறு திரை பிரபலங்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும், சுமார் 1,400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்கள். மேலும் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளத்தில் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜூலை 2ஆம் தேதி (நேற்று) ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்யக் கடைசி நாளாகும். இதனால் கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது பல்வேறு திரை பிரபலங்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். அதில்...
"எந்த நேரத்திலும் ஒரு திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய மத்திய அரசை அனுமதிக்கும் ஒளிப்பதிவு (திருத்த) மசோதா 2021 (வரைவு) ஒவ்வொரு படத்திற்கும் பாதுகாப்பின்மை, வணிக வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் மற்றும் தொழில்துறையை பாதிக்கும் வகையாக அமைந்துள்ளது. எனவே அத்தகைய விதிகள் கைவிடப்பட வேண்டும். திருட்டுத்தனமாக படத்தை வெளியிடுவதை தடுப்பதற்கான வரைவு நடவடிக்கைகள் இதில் இருப்பது பாராட்டத்தக்கவை என்றாலும், நம்மைப் போன்ற ஒரு நாகரிக சமுதாயத்தில் கருத்துச் சுதந்திரத்தை நெரிப்பது என்பது மிகவும் விரும்பத்தகாதது. எனவே எங்கள் கோரிக்கையை கவனிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.