Skip to main content

கண்ணதாசன் குற்றாலம் போன கதை... - வைரமுத்து பகிர்ந்த சுவையான நினைவுகள்

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

நேற்று (13 ஜூலை) கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள். இதை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது பல சுவாரசியமான நிகழ்வுகளை, நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பிற முன்னணி பாடலாசிரியர்களுக்கும் தனக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினார்...

 

vairamuthu speech



"எனக்கும் என்னைவிட சிறந்தவர்களான மூத்த கவிஞர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை நான் இந்த மேடையில்தான் சொல்கிறேன். இதை மனுஷ்யபுத்திரன் அறிவார். கோடம்பாக்கத்துக்கு இரண்டு மாதங்கள் வராமல் இருந்த கவிஞர்கள் உண்டு. ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் ஆண்டுக்கணக்கில் இடைவெளி விட்ட கவிஞர்கள் உண்டு.

 

 


'மணப்பாறை மாடுகட்டி' எழுதிய, உத்தமபுத்திரனில் 'முல்லை மலர் மேலே' எழுதிய, 'தாய்க்குப் பின் தார'த்தில் 'மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே' என்ற பாட்டை எழுதிய.. மக்களைப் பெற்ற மகராசி எழுதியவர் மருதகாசி என்ற மகத்தான கவிஞர். இத்தகைய கவிஞர், திரைத்துறையில் தனக்கு வாய்ப்பில்லை என்று கும்பகோணம் சென்று விவசாயம் செய்தார். இரண்டு ஆண்டுகள் சென்னை வரவேயில்லை. பின்னர், தேவர் அவரை அழைத்து வந்து பாட்டெழுதச் சொன்னார். இப்படியெல்லாம் நிகழ்ந்ததுண்டு.

 

 

kannadasan



கண்ணதாசன் குற்றாலத்துக்குப் போவார். இவர் கிளம்பும்போது அங்கு அருவியில் தண்ணீர் வந்திருக்காது. ஆனால், அங்கு இருக்கும்போது அருவியில் தண்ணீர் வரத் துவங்கினால் உடனே அங்கேயே தங்குவார். ஒரு மாதம் தண்ணீர் வந்தால், 'ஒரு மாசம் நான் இங்கதான் தங்குறேன்... தினமும் குளியல், தினமும் எண்ணெய் தேச்சுவிடு, தினமும் கோழிக் குழம்பு, தினமும் கோழிக் குழம்புக்குப் பக்கத்துல ஒன்னு இருக்குமே அது' அப்படி சுதந்திரமா இருப்பார். ஒரு மாதம், மேலே ஆகாயம்... கீழே பூமி... நடுவில் கண்ணதாசன்னு சுதந்திரமா இருப்பார்.

 

vaali mgr



பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாட்டு எழுதிட்டு, இடையில ஊருக்குப் போய் விவசாயம் பண்ணிட்டு வந்து திரும்ப கொஞ்ச நாள் எழுதுவார். ஒரு முறை வாலியைப் பத்தி பாரதிராஜா சொன்னார், 'மூணு வருஷமா வாலியோட காரை நான் கோடம்பாக்கத்துல பாக்கவேயில்ல'னு. கண்ணதாசன் மறைவுக்குப் பிறகு, சகலகலா வல்லவன் படத்துக்கு பாட்டு எழுதித்தான் அவர் ரெண்டாவது ரௌண்டே வந்தாருன்னு சொல்வாங்க. அப்போதான் அவர் சம்பாரித்தார். எம்.ஜி.ஆர்க்கு பாட்டெழுதி சம்பாரிக்காதவர், 'நேத்து ராத்திரி அம்மா' எழுதித்தான் சம்பாரித்தார்.

 

 


எல்லோருக்கும் இடைவெளி உண்டு. அல்லது அவர்களே இடைவெளி விடுவார்கள். ஆனால், 1980ஆம் ஆண்டு மார்ச் 10 முதல் இன்று வரை நான் பாட்டு எழுதாத நாள் இல்லை. இதுதான் மற்றவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்".     

 

 

 

 

சார்ந்த செய்திகள்