நடிப்பு, ஒளிப்பதிவு, சட்டம், அரசியல் எனப் பல துறைகளில் இயங்கி வருபவரும் கவிஞர் கண்ணதாசனின் மகனுமான கோபி கண்ணதாசனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சமீபத்தில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், வெற்றிமாறனுடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
வெற்றிமாறன் அலுவலகத்தில் எனக்கு ஏன் அப்படி நடந்தது என்று இன்றுவரை தெரியவில்லை. உன்னை அழைத்து அவமானப்படுத்தி அனுப்புவோம் என்று திட்டமிட்டு செய்தது மாதிரிதான் இது இருக்கிறது. ’சார் உங்கள பார்க்கணும்னு சொல்றாரு’ என்று அவர் ஆபிஸில் இருந்து போன் வரும். நான் உடனே கிளம்பிப்போவேன். ஒன்பது முறை அதுபோல சென்றிருக்கிறேன். அங்கே போனவுடன் அவரது உதவியாளர்கள் என்னை உள்ளே அனுப்புவார்கள். உள்ளே வெற்றிமாறன், என்னை அப்படியே பார்ப்பார். ’சரி... சொல்லி அனுப்புகிறேன்’ என்பார். ஒருமுறை போலீஸ் உடையணிந்து நடித்துக்காட்டினேன். அவருக்கும் அது பிடித்திருந்தது. என்னிடம் தேதியெல்லாம் சொல்லிவிட்டு தயாராக இருங்கள் என்றார்.
அதன் பிறகு ஒருநாள், ’சார் உங்கள பார்க்கணுமாம்’ என்று சொன்னார்கள். அன்று அவர்களே காரும் அனுப்பியிருந்தார்கள். எனக்கு ஒரே குழப்பம். எப்போதும் நம் காரில்தானே செல்வோம். இப்போது ஏன் கார் அனுப்பியிருக்கிறார்கள் என யோசித்துக்கொண்டே காரில் ஏறினேன். கார் நேராக ஒரு ஷூடட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றது. ஒரு அரைப்பக்க வசனத்தை கொடுத்து நடிக்கச் சொன்னார்கள். உடனடியாக மனப்பாடம் செய்து நடித்ததால் பாதியிலேயே தடங்கல் ஏற்படுகிறது. ஒருவித கடுப்புடன் பிரேக் சொல்லிவிட்டு வெற்றிமாறன் கிளம்பிவிடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் ப்ரொடக்ஷன் மேனேஜர் அழைத்து, ஒரு சின்ன தொகையை கையில் கொடுக்கிறார். பின்னர், நான் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன். இப்படி ஒரு சம்பவம் ஏன் நடந்தது என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. இதில் நான் எதையும் வெட்டவுமில்லை; சேர்த்து மிகைப்படுத்தவும் இல்லை. நடந்ததை அப்படியே கூறுகிறேன். 25 படங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்துவிட்டேன். எந்தப் படத்திலும் அவமானப்படவில்லை. இது என் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத கசப்பான அனுபவம்.