பிரபல ஓ.டி.டி நிறுவனமான ‘ஈரோஸ் நவ்’ நவராத்திரி பண்டிகையை ஒட்டி இரண்டு விளம்பர போஸ்டர்களை வெளியிட்டது. அது ஆபாசமாகவும் மத உணவுர்களைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் ஈரோஸ் நவ் தளத்தைப் புறக்கணிக்கக் கூறி '#BoycottErosNow' என்ற ஹாஷ்டேகும் ட்ரெண்டானது.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனாவத், ஈரோஸ் நவ் உள்ளிட்ட ஓ.டி.டி தளங்களும் ஆபாசத் தளங்களாகவே இருப்பதாக விமர்சித்துள்ளார். ஈரோஸ் நவ் வெளியிட்ட போஸ்டர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்துள்ள அவர், "நாம் சினிமாவை திரையரங்கில் குழுவாகப் பார்க்கும் முறையைப் பாதுகாக்க வேண்டும். தனிப்பட்ட சிலரின் பார்வைக்காக பாலியல் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதை விட பார்வையாளர்களை அதிக அளவில் கவர்ந்திழுப்பது மிகவும் கடினம். கலையை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்த மாதிரியான சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. எல்லா ஓ.டி.டி தளங்களும் ஆபாசத் தளங்களாவே இருக்கின்றன.
சர்வதேச ஓ.டி.டி தளங்களில்கூட உள்ளடக்கம் பரபரப்பாக இருக்க வேண்டும் என்றால் அவற்றில் வெளிப்படையான பாலுறவுக் காட்சிகள், கொடூ'ரமான வன்முறை காட்சிகளை உருவாக்க வேண்டியுள்ளது. அடிப்படையில் பார்வையாளர்களின் பாலியல் பசியைத் துண்டுவது போன்ற உள்ளடக்கத்தை தவிர, வேறு உள்ளடக்கங்கள் நிர்வாகத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
ஒருவர் உடனடித் திருப்திக்காக ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டு தனியாகப் படம் பார்ப்பது அந்தத் தளங்களின் தவறல்ல. திரைப்படங்கள், ஒட்டுமொத்த குடும்பம், குழந்தைகள், அக்கம் பக்கத்தினருடன் பார்க்கும் ஒரு சமூக அனுபவமாக இருக்க வேண்டும்.
சமூகமாகச் சேர்ந்து பார்ப்பது நமது விழிப்புணர்வை அதிகரிக்கும். நாம் பார்க்கும் ஒரு விஷயத்தை இன்னொருவரும் பார்க்கிறார் எனும்போது, அவர்கள் நம்மைப் பற்றி எப்படி நினைக்கிறார்களோ அப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். கவனமாக இருப்போம். நமது மூளைக்கும், உணர்ச்சிகளுக்கும் தரும் விஷயங்களில் தணிக்கை மிக முக்கியம். தணிக்கை என்பது நமது மனசாட்சியாகக் கூட இருக்கலாம்” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்ககளிலும் பல்வேறு தரப்பிலும் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஈரோஸ் நவ் நிறுவனம் அந்த போஸ்டர்களை நீக்கியதோடு மன்னிப்பும் கேட்டுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நாங்கள் எல்லா கலாச்சாரங்களையும் சமமாக மதிக்கிறோம். யாருடைய உணர்வையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் அந்த போஸ்டர்களை நீக்கிவிட்டோம். மேலும், அது யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்திருந்தால், வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.