Skip to main content

முருகனை திட்டிய தேவர்... ரெட்டியார் ரூபத்தில் வந்து உதவிய முருகன்! கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள் #6

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

devar

 

தமிழ்த் திரையுலகில் கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தொடர் தோல்விகளால் தடுமாறி வந்த சாண்டோ சின்னப்பத்தேவர், அதிலிருந்து எவ்வாறு மீண்டார் என்பது குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு....

 

தேவர் எடுத்த நான்கு படங்கள் தொடந்து தோல்வியைத் தழுவியது பற்றி முன்னரே கூறியிருந்தேன். தொடர் தோல்வி காரணமாக அடுத்தடுத்து தேவரால் படம் இயக்க முடியவில்லை. அதனால் அவர் அலுவலகத்தில் வேலை பார்த்த பெரும்பாலானோர் கிளம்பிவிட்டனர். படக் கம்பெனி கிட்டத்தட்ட ஒரு கல்யாண வீடு மாதிரிதான் இருக்கும். ஆளுக வருவாங்க.. போவாங்க... இப்ப மூன்று மாசமா படம் எடுக்குறது நின்ன உடனே வெறிச்சோடி கிடக்குது. தேவரும் அவர் கூட சமையல்காரர், வாட்ச்மேன், ப்ரொடக்ஷன் பாய், ட்ரைவர் என ஐந்து பேர் மட்டும்தான் இருக்காங்க. அன்று தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு... நான்கு பேரும் தேவர் முன்னாடி வந்து நிக்குறாங்க. தேவருக்கு ஒரே அதிர்ச்சி. "என்னப்பா நீங்களும் கம்பெனியை விட்டுப் போறீங்களா" என தேவர் கேட்க, "இல்லையா நாளைக்குத் தீபாவளி... ஏதும் கவனிக்கலியே" என நால்வரும் சேர்ந்து கூறியுள்ளனர். தேவருக்கு அப்போதுதான் போனஸ் குடுக்கணுமேன்னு உரைச்சிருக்கு.

 

உடனே, அந்தத் தெருமுக்கில் இருந்த ஒரு சேட்டு வீட்டுக் கதவை போய் தட்டினார் தேவர். அந்த சேட்டு, தேவருக்கு ரொம்ப நெருக்கமானவர்தான். "என்ன தேவரே, இந்த நேரம் வந்துருக்கீங்க" எனக் கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். "ஆபிஸ்ல வேலை பார்க்குறவங்களுக்குப் போனஸ் கொடுக்கணும்... அவசரமா ஆயிரம் ரூபாய் வேணும்... ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்கிறார் தேவர். அந்த சேட்டு பணத்தை எடுத்துக்கொண்டு வந்து தேவரிடம் கொடுக்கிறார். பணத்தை வாங்கிய தேவர், "நான் எதுல கையெழுத்து போடணும்னு சொல்லுங்க" எனக் கேட்கிறார். "கையெழுத்தெல்லாம் வேண்டாம்... தேவரைப் பத்தி எனக்குத் தெரியும்" என நம்பிக்கையோடு கூறுகிறார் ரெட்டியார். அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்பதெல்லாம் பெரிய விஷயம். 

 

ad

 

அலுவலகத்திற்குச் சென்ற தேவர், அங்கிருந்த நால்வரையும் அழைத்து தலா 250 ரூபாய் பிரித்துக் கொடுத்தார். நல்ல படம் பண்ணிக்கொண்டிருந்த கம்பெனி, ஃபெயிலியர் ஆகி நின்றுவிட்டதுன்னா அங்கு என்னவெல்லாம் நடக்கும் என்பது கலையுலகத்தில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும். பின், வீட்டிற்குச் சென்ற தேவர் அன்று நிம்மதியாகத் தூங்கினார். தேவர்கிட்ட உள்ள சிறப்பு என்னனா, தொழில்ல தோல்வியடைந்தா முருகனை அநியாயத்திற்குத் திட்டுவார். ஃபோட்டோவைப் பார்த்துதான் திட்டுவார். ஆனால், முருகன் அவர் முன்னால உட்கார்ந்து இருக்குற மாதிரி நினைத்து, உனக்கெல்லாம் அறிவு இருக்கா... உனக்கு அதிர்ஷ்டமே இல்லடா முருகா... படம் ஓடுனாத்தான் உன் கோயிலுக்கு நிதி கொடுக்க முடியும்... இப்ப அப்படியே உட்கார்ந்து இருடா என்பார். 

 

மறுநாள் காலை தூங்கிக்கொண்டு இருக்கும்போதே நாகி ரெட்டியார்கிட்ட இருந்து தேவருக்கு ஃபோன் வருது. “தேவரே உங்கள நேர்ல பாக்கணும்... ஸ்டூடியோக்கு வாங்க” என்கிறார் ரெட்டியார். உடனே குளிச்சு கிளம்பி ரெட்டியார் ஸ்டூடியோவிற்கு தேவர் போகிறார். மூன்று மாசமா படம் எடுக்காதது குறித்து ரெட்டியார் கேட்க, “தொடர்ந்து நாலு படம் ஃப்ளாப் ஆகிருச்சு... பைனான்சுக்கு ஒருத்தரும் பணம் தர மாட்டுக்காங்க” என தேவர் விளக்கம் அளிக்கிறார். உடனே ரெட்டியார், “ஏன் தேவரே... நான் உனக்கு கேட்க கேட்க ஏன் பணம் கொடுத்தேன் தெரியுமா... உங்கிட்ட நேர்மை இருக்கு... பொய் கிடையாது.. குடி, கூத்து கிடையாது... உழைப்புல நம்பர் 1” என்கிறார். “நாலு படம் போகலன்னு இப்படி உட்கார்ந்துட்டியே... என் நிலைமைலாம் என்னன்னு உனக்குத் தெரியுமா” என்று கூறி, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். 

 

பின், ”தேவரே உடனே அடுத்த படத்தை நீ தொடங்கு... எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தாரேன்” என்றார் ரெட்டியார். தேவருக்கு ஒன்னுமே புரியல. அந்த முருகன்தான் ரெட்டியார் ரூபத்தில் வந்து உதவுவதாக நினைத்து தேவர் கண்கலங்கினார். ரெட்டியார் கொடுத்த நம்பிக்கையில் அடுத்தப் படத்திற்கான பணிகளை உடனே தேவர் தொடங்கினார்.. (தொடரும்)

 

 

சார்ந்த செய்திகள்