Skip to main content

காரில் கிடந்த மல்லிகைப்பூ... கடுப்பில் சேரைத் தூக்கி அடித்த தேவர்... கலைஞானம் பகிரும் மலரும் நினைவுகள் #5

 

kalaignanam

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சாண்டோ சின்னப்பத்தேவர் மற்றும் எம்.ஜி.ஆர் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

முந்தைய பகுதிக்கு இங்கே ஃக்ளிக் செய்யவும் 

 

சாண்டோ சின்னப்பத்தேவர் காலையில் கார் கதவைத் திறக்கிறார். ஒரு முழ நீளமுடைய மல்லிகைப்பூ உள்ளே கிடக்கிறது. உடனே டிரைவரை அழைத்து விசாரிக்கிறார். முதலில் தயங்கிய டிரைவர், பின் வந்தது யார் என்பதைக் கூறுகிறார். நேற்று இரவு வந்தவர், இரவு முழுவதும் நம்ம ஆஃபிஸில்தான் இருந்தார்... எல்லாரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்... காலையில் தான் போய் இறக்கிவிட்டு வந்தோம் என்கிறார். தேவருக்கு பயங்கர கோபம். "காலையில் யார் வந்தாலும் பரவாயில்லை... நைட் எதுக்கு ஆட்களைக் கூப்பிட்டு வந்து ஆஃபிஸ்ல இருக்க வைக்குறீங்க. இந்தக் காரும் ப்ரொடக்ஷன் கார். நான் இந்தக் காருல போவேன்னு இந்த ஏரியால இருக்க எல்லாருக்கும் தெரியும். நீ நைட்டு யாரையாவது கூட்டிட்டு வந்தா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க" என்று கண்டிக்கிறார். 

 

ad

 

நேரே ப்ரொடக்ஷன் ஆஃபிஸுக்கு போன தேவர், எஸ்.ஏ.நாராயணனை அழைத்து நைட்டுலாம் எதுக்கு ஆட்களைக் கூட்டிட்டு வந்து ஆஃபிஸில் இருக்க வைக்குறீங்க எனக் கேட்கிறார். "தேவரே உமக்கு இதெல்லாம் தேவையில்லை" என எஸ்.ஏ.நாராயணன் கூறிவிட, தேவருக்குக் கடும் கோபம். "நான் கஷ்டப்பட்டு பணம் சேர்த்து படம் எடுத்துக்கிட்டு இருக்கேன்... என் வேலை இல்லையா" எனக் கேட்கிறார் தேவர். "ஆமாயா... படத்தை எடுத்துக் கொடுக்கிறோம். கடைசியில் கணக்கு பார்த்து லாபத்தை வாங்கிட்டு போய்கிட்டு இருங்க" என அவர் சொல்ல, உச்சகட்ட கோபத்திற்குச் சென்ற தேவர் சேரைத் தூக்கி அடித்துவிடுகிறார்.

 

அப்போது, 'நல்ல தங்கை' படம் பாதிதான் முடிந்திருந்தது. ஏ.பி.நாராயணன் வந்து பிரச்சனையை சமாளித்து வைத்து, தேவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை வாங்கிக் கொடுத்து, அந்தப் படத்தில் இருந்து தேவரை வெளியேறச் சொல்கிறார். தேவரும் தனக்குச் சேர வேண்டிய பணத்தை வாங்கிவிட்டு, நல்ல தங்கை படத்தில் இருந்து வெளியேறிவிடுகிறார். இது நடந்தது எல்லாம் கோயம்புத்தூர்ல. அதன் பிறகுதான், தேவர் சென்னைக்கு வருகிறார்.

 

நான் சென்னை வந்து படம் எடுக்கப் போறேன் என எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டு சென்னை கிளம்பத் தயாராகிறார் தேவர். "அண்ணே நீங்க படம் எடுத்தா நான் அதுல நடிக்கணும்னு கோயம்புத்தூர் பார்க்ல உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது சொன்னேனே... மறந்துட்டிங்களா... நீங்க வேலையை ஆரம்பிங்க... மற்றதை நான் பார்த்துக்கிறேன்" என்றார் எம்.ஜி.ஆர். ரெண்டு பேரும் சேர்ந்த முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு. எம்.ஜி.ஆர். இல்லனா தேவர் இவ்வளவு பெரிய ஆளாக வந்திருக்க முடியாது. அந்தப் படத்தோட கிளைமேக்ஸ் எடுக்குற சமயத்துல இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்திருச்சு. அப்போது பிரிஞ்சவங்க பின்னாடி ஒன்னு சேர்ந்துட்டாங்க. எம்.ஜி.ஆர் பிரிந்த பிறகு தேவர் எடுத்த நான்கு படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன. அதிலிருந்து தேவர் எப்படி மீண்டு வந்தார் என்பது பற்றி அடுத்த பகுதியில் கூறுகிறேன்.