தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகை வாணி ஸ்ரீ திரைத்துறையில் அறிமுகமானது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
நடிகை வாணி ஸ்ரீ என்னுடைய கதையில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். துணை நடிகை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வந்த அவரை நான்தான் கதாநாயகி கதாபாத்திரத்திற்குப் பரிந்துரை செய்தேன். அவர் திரைத்துறைக்குள் அறிமுகமானதற்குப் பின்னால் ஒரு சுவாரசிய சம்பவம் உள்ளது. அதுபற்றி உங்களுக்குக் கூறுகிறேன்.
'காதல் படுத்தும் பாடு' கதைதான் என்னுடைய முதல் கதை. அதை 1965இல் முதல்முறையாக ஒரு தயாரிப்பாளரிடம் விற்றேன். அந்தக் கதையின் மூலம் வாணி ஸ்ரீ, சுருளி ராஜன், எடிட்டர் வெள்ளைச்சாமி எனப் பலர் அறிமுகமானார்கள். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடித்த ஜெயஸ்ரீயைத்தான் கதாநாயகியாக அந்தப் படத்தில் முதலில் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஜெய்சங்கர் கதாநாயகன். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்தப் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். தெலுங்கில் சவுகார் ஜானகியின் தங்கை கிருஷ்ணகுமாரியை ஒப்பந்தம் செய்தனர். அவருக்குத் தோழியாக துணை கதாபாத்திரத்தில் நடிக்க வாணி ஸ்ரீ ஒப்பந்தம் செய்யப்பட்டார். 'காதல் படுத்தும் பாடு' படம் தொடங்க இருந்த நேரத்தில், ஜெயஸ்ரீக்கு இந்தியில் ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தை முடித்துவிட்டு விரைவில் வந்துவிடுவேன் எனக் கூறிவிட்டு பாலிவுட்டிற்கு சென்றுவிடுகிறார் ஜெயஸ்ரீ. பின் சில நாட்கள் கழித்து தன்னால் உடனடியாக வரமுடியாத நிலை இருப்பதாகவும் வேறு யாரையாவது வைத்து படம் எடுத்துக்கொள்ளுங்கள் என ஜெயஸ்ரீ கூறிவிடுகிறார்.
வேறு வழியில்லாததால் முதலில் தெலுங்கில் எடுக்கலாம் என்று முடிவெடுத்து தெலுங்கு படப்பிடிப்பைத் தொடங்குகின்றனர். நான் அங்கு சேர் போட்டு அமர்ந்திருந்தேன். தெலுங்கு நாயகி கிருஷ்ணகுமாரியும் வாணி ஸ்ரீயும் மேக்கப் ரூமில் இருந்து வெளியே வந்தனர். கிருஷ்ணகுமாரியைவிட வாணி ஸ்ரீ அழகாக இருந்ததால் அவர் யாரென்று விசாரித்தேன். அவர் தோழியாக நடிக்க இருப்பதாக ஒருவர் கூறினார். அவரை இதற்கு முன்பு எங்கோ பார்த்தது போல இருந்ததால், அவரை அழைத்து யாரென்று விசாரித்தேன். கடைசியில் அவர் நான் வசிக்கும் தெருவிற்கு பக்கத்தில் தெருவில் வசிப்பதாகாக் கூறினார்.
வாணி ஸ்ரீக்கு மாமா ஒருவர் இருந்தார். ஐந்து மணிக்கு உளுந்த வடை போட்டு ஒரு டின்னில் எடுத்துக்கொண்டு வருவார். அந்தத் தெருவில் இருக்கிற குழந்தைகளுக்கு வடை கொடுத்துவிட்டு காசு வாங்காமல் செல்வார். அந்தத் தெருவில் 50 குழந்தைகளுக்கும்மேல் இருப்பார்கள். பின், கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் வருவார். அந்தக் குழந்தைகளின் தாய்மார்கள் வடைக்கான காசை அவரிடம் கொடுப்பார்கள். சில தாய்மார்கள் இன்று காசில்லை என்பார்கள். 'இருக்கட்டுமா... குழந்தைதான சாப்பிட்டுச்சு... இன்னைக்கு இல்லனா நாளைக்கு கொடுங்க' எனப் பெருந்தன்மையுடன் கூறுவார். அந்த வருமானத்தை நம்பித்தான் வாணி ஸ்ரீ மாமாவின் குடும்பம் இருந்தது. அவர்கள் வீட்டில்தான் வாணி ஸ்ரீ தங்கியிருந்து சினிமாவில் நடித்துவந்தார்.
அன்று ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்து என் மனைவியிடம் அந்தப் பெண் குறித்து கேட்டேன். ஏதோ நாடகத்தில் நடித்துவிட்டு வரும்போது அவரை பார்த்திருப்பதாக என் மனைவி கூறினார். அந்த தெலுங்கு ஷூட்டிங்கும் ஓரிரு நாளில் நின்றுவிட்டது. பின், தமிழில் எடுக்க முடிவெடுத்த இயக்குநர் ஜோசப் தளியத், ஏதாவது நடிகை இருந்தால் கூறுங்கள் என என்னிடம் கேட்டார். நான் உடனே, தெலுங்கில் துணை கதாபாத்திரத்தில் நடித்த வாணி ஸ்ரீயின் பெயரைக் கூறினேன். அவர் சிறிது யோசித்துவிட்டு, அவர் பொருத்தமாக இருப்பார்... அவரையே நடிக்க வைப்போம் என்றார். பின், வாணி ஸ்ரீயை அழைத்து ஜோசப் தளியத் பேசினார். “நீதான் நம்ம படத்துக்கு ஹீரோயின்... ரெடியா இரு... வண்டி வரும்” என்றார். மறுநாளே படப்பிடிப்பு தொடங்கியது. அந்தப் படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றிகிடைத்தது. அதற்குப் பிறகு ‘வசந்த மாளிகை’ மாதிரியான பல பெரிய படங்களில் நடித்து மிக உயர்ந்த இடத்திற்கு சென்றார்.