சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. இது, இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 3-வது மொழி இந்தி இல்லை, அவரவர் விருப்பப்படி மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்த எதிர்ப்புக்கு பின்னர் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்து தெரிவிக்க வேண்டிய காலகட்டத்தை ஒரு மாதம் நீட்டித்துள்ளது மத்திய அரசு.
இந்த அறிக்கை வெளியானபோதே நடிகர் சூர்யா ட்விட்டரில் அனைவரும் இதுகுறித்து பேச வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அகரம் அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய தேசியக் கல்வி கொள்கைக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அன்றிலிருந்து பலரும் சமூக வலைதளத்தில் சூர்யாவுக்கு ஆதரவாகவும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவிக்கையில், “புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும். நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம்.ஆனால், எதுவுமே தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும். ஆங்கில வழி கல்வி கற்பதற்காக தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் நிலை இருப்பதால் அதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் இருந்து ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளுக்கு எவ்வித ஆபத்துக்கள் இல்லாமல், அரசு பள்ளி எண்ணிக்கை குறையாமல் அரசு பார்த்துக் கொள்ளும்”என்றார்.