சுந்தர் பாலு இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “கன்னித்தீவு”. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், "ராமநாராயணன் 28 நாட்களில் படம் எடுப்பார். 100 நாட்கள் ஓடும். ஆனால், இப்போது 280 நாட்கள் படம் எடுக்கிறார்கள் 20 நாட்கள் கூட ஓடுவது இல்லை. ஏழைகளுக்கு உதவுங்கள். நான் என்னால் இயன்றதை இயலாதவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். புகழுக்காக அல்ல; புண்ணியத்திற்காக.எப்போதும் மனதை சுத்தமாக வைத்திருங்கள்.
பெண்களை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் மதுபானம் தான். அனைத்து பெண்களும் சேர்ந்து தான் மதுவை ஒழிக்க வேண்டும். 4 பெண்களை வைத்து கன்னித்தீவு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் பாலு. இரண்டு பாடல்களும் நன்றாக இருந்தது. இசையும், பின்னணி இசையும் நன்றாக இருந்தது. டிரைலரைப் பார்க்கும் போது ஆங்கில படம் போன்று இருக்கிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய கே.ராஜன், "எனக்கு உடல்நிலை சரியில்லாததால் சில காலமாக ஹோட்டலில் தங்கி தனிமையில் இருக்கிறேன். சவுண்ட் அலர்ஜி ஏற்பட்டதால் சத்தம் கேட்டால் தூக்கம் கெட்டுபோய்விடுகிறது. அதனால் தனிமையில் இருக்கிறேன். அதை பற்றி ஒருவர் தவறாக பேசினார். என் குடும்பத்தினர்தான் என்னை பார்க்க ஓட்டலுக்கு வருவார்கள். வேறு யாரும் அங்கு வருவதில்லை. வந்தாலும் நான் சேர்த்துக்கொள்ளமாட்டேன். 80 வயதில் நான் ரூம் போட்டு என்ன செய்யப்போறேன். நடிகை, குடும்பப்பெண்கள் யாரை பற்றியும் தவறாக பேசாதீர்கள்" எனத் தெரிவித்தார்.
கே.ராஜன் ஓட்டலில் தங்கியிருப்பது குறித்து சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.