/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2_164.jpg)
இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள உடன் பிறப்பே திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ட்ரைலர் ஒரே இரவில் 30 லட்சம் பார்வைகளை யூடியூப் தளத்தில் கடந்துள்ளது.
காணொளி வாயிலாக நேற்று நடைபெற்ற ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா பேசுகையில், "எனது குருநாதர்கள் பிரியதர்ஷன் சார் மற்றும் வசந்த் சார் இருவருக்கும் நன்றி. எனக்கு தெரிந்த அனைத்துமே இருவரிடமும் கற்றுக்கொண்டதுதான். என்னுடைய கணவர் சூர்யாவுக்கும் நன்றி. அவர் இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை. அவர்தான் என்னுடைய பெரிய பலம். எனது திரைப்பயணம் மிகவும் எளிமையானது. ஆரம்பத்தில் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.
என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில்தான் நிறைய கற்றுக்கொண்டேன். எனது திரைப் பயணத்தில் இதுதான் முக்கியமானது. புது இயக்குநர்கள், புது கதைகள் என கடந்த 8 ஆண்டுகள் மிகவும் அழகானது. பெண்கள், குடும்பத்தினர் அனைவருமே பெருமைப்படும்படியான படங்களில் நடிக்க விரும்புகிறேன். 'உடன்பிறப்பே' என்னுடைய 50ஆவது படம். இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இதுவரை நடித்த படங்கள் அனைத்திலுமே நிறைய பேசியிருப்பேன். ஆனால், பெண்களின் உண்மையான வலிமையை இந்தப் படத்தில்தான் பிரதிபலித்துள்ளேன். பெண்களின் மிகப்பெரிய பலம் என்பது அமைதிதான். 90% பெண்கள் இந்த மாதிரியான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.
பேசுவது என்பது மிகவும் எளிது. அமைதியில் ஒரு வலிமை இருக்கிறது. இதுவரை நான் நடித்த படங்களிலேயே ரொம்ப அழகான கதாபாத்திரம் இது. கிராமத்து பெண்ணாக நான் நடிக்க முடியும் என நம்பிய இரா.சரவணன் சாருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும்" எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)