‘சாஹோ' படத்தைத் தொடர்ந்து, ராதா கிருஷ்ணா இயக்கத்தில் 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அவரது 20ஆவது படமான இந்தப் படத்தை, யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதில், பிரபாஸிற்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 'ராதே ஷ்யாம்' அறிவிக்கப்பட்ட நாள் முதலே தெலுங்கு சினிமாத் துறையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் மோஷன் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் இந்தி பதிப்பிற்கும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பதிப்பிற்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர்.
‘ராதே ஷ்யாம்’ படத்தின் இந்தி பதிப்பிற்கு மிதுன் இரு பாடல்களுக்கும், மனன் பரத்வாஜ் ஒரு பாடலுக்கும் இசையமைத்துள்ளனர். பிரபல கவிஞர்களான குமார் மற்றும் மனோஜ் முன்தஷிர் ஆகியோர் பாடல்களை இயற்றியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பதிப்பிற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, கிருஷ்ண காந்த் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்படத்தில், சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷி, முரளி ஷர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியிடப்படுகிறது.