
ஜுராசிக் வேர்ல்ட் பட வரிசையில் அடுத்து உருவாகும் பாகம் ‘ஜுராசிக் வேர்ல்ட்: டோமினிக்’. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருட ரிலீஸுக்காக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கரோனா அச்சுறுத்தலால் கடந்த ஃபிப்ரவரி மாதம் இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இப்படத்தின் ஷூட்டிங் லண்டனில் துவங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவிவிடக் கூடாது என்பதற்காக மிகவும் பாதுகாப்பாகக் குழு குழுவாக அமைத்து ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த குழு லண்டனில் நடைபெறும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறது.
இதுகுறித்து பேசியுள்ள இப்படத்தில் நடிக்கும் நடிகர் ஜெஃப் கோல்ட்ப்ளம், “இன்னும் ஓரிரு வாரங்களில் நாங்கள் இங்கிலாந்து செல்லவுள்ளோம். அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ஜூராசிக் வேர்ல்டு படப்பிடிப்பில் நாங்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கப்போகிறோம்.
அவர்கள் எங்களிடம் படத்தின் 109 பக்கக் கதையைக் கொடுத்துள்ளனர். எங்களின் பாதுகாப்புக்காக ஏராளாமான பணத்தையும், அர்ப்பணிப்பையும் இதில் முதலீடு செய்துள்ளனர். படக்குழுவினர் ஒவ்வொருவரும் பரிசோதனை செய்யப்பட்டு, தனித்தனி அறைகளில் தங்கவைக்கப்படுகின்றனர்.

இது ஒரு ஆபத்தான காலகட்டம் என்பதை நாங்கள் அறிவோம். எங்களோடு சாம் நீல், க்றிஸ் ப்ராட், லாரா டெர்ன் ஆகியோரும் வரவுள்ளனர். அதோடு அங்கே சில டைனோசர்களும் இருக்கப் போகிறது” என்று தெரிவித்துள்ளார்.